📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 03, 2026 10:03 PM

பட்டப்படிப்புக்கு முன் 2+2 திட்டம்: வேலை அனுபவம்

பட்டப்படிப்புக்கு முன் 2+2 திட்டம்: வேலை அனுபவம்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏஐ) விரைந்து மேம்பட்டுவரும் சூழலில், மாணவர்களின் வேலைவாய்ப்புகளை உயர்த்தும் நோக்கில், சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (எஸ்ஐடி) புதிய முன்னோடித் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

அதன்படி, நான்கு பொறியியல் மற்றும் தகவல், தொடர்புத் தொழில்நுட்பத் (ஐசிடி) துறைகளைச் சேர்ந்த பட்டக்கல்வி மாணவர்கள், தங்களது படிப்பை முடித்துப் பட்டம் பெறுவதற்குள் ஏறக்குறைய ஈராண்டுகள் வேலை அனுபவத்தைப் பெற்றிருப்பர்.

‘2+2’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிறப்புத் திட்டம் 2027ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து தொடங்கும்.

சிங்கப்பூரிலுள்ள ஆறு தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களிலேயே மிக நீண்டகால வேலைப் பயிற்சியை வழங்கும் திட்டமாக இது அமைகிறது.

இத்திட்டத்திற்குத் தேர்வாகும் மூன்றாமாண்டு மாணவர்கள், முதல் இரண்டு ஆண்டுகளைப் பல்கலைக்கழக வளாகத்திலும், அடுத்த இரண்டு ஆண்டுகளை நிறுவனங்களில் நேரடி வேலைப் பயிற்சியிலும் கழிப்பர்.

ஏஐ வளர்ச்சியால் வேலைவாய்ப்புச் சந்தையில் புதியவர்களுக்கான தகுதிநிலைகள் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட எஸ்ஐடி தலைவர் சுவா கீ சியாங், நீண்டகால வேலை அனுபவம் மாணவர்களை உயர்நிலைப் பணிகளைச் செய்யத் தயார்ப்படுத்தும் என்றார்.

முதற்கட்டமாக, மின்னியல் மற்றும் மின்னணுவியல், இயந்திரவியல், தகவல், தொடர்புத் தொழில்நுட்பம் (தகவல் பாதுகாப்பு), தகவல், தொடர்புத் தொழில்நுட்பம் (மென்பொருள் பொறியியல்) ஆகிய நான்கு துறைகளில் இந்த ‘2+2’ முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

ஏஸ்டார் நுண்மின்னணுவியல் கழகம், எஸ்டி மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், அப்ளைடு மெட்டீரியல்ஸ், என்சைன் இன்ஃபோசெக்யூரிட்டி, என்சிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கெடுக்கின்றன.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடப்பிலுள்ள ஒருங்கிணைந்த வேலை கல்வித் திட்டத்தின் நீட்சியாகப் புதிய ‘2+2’ திட்டம் இடம்பெறவுள்ளது.

நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். வேலைப் பயிற்சியின்போது இணையம் வழியாகவும் வளாகத்திற்கு வந்தும் மாணவர்கள் தங்களது சான்றிதழ்ப் படிப்புகளையும் ஆய்வுத் திட்டங்களையும் நிறைவுசெய்வர். நிறுவனங்களில் பணியிட மேற்பார்வையாளர்களும் எஸ்ஐடியில் ஆசிரியப் பெருமக்களும் மாணவர்களின் பணித்திறனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்வர்.