📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 03, 2026 10:03 PM

கேபிட்டலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட்: சிங்கப்பூரில் 90 ஊழியர்கள் ஆட்குறைப்பு

கேபிட்டலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட்: சிங்கப்பூரில் 90 ஊழியர்கள் ஆட்குறைப்பு

சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சொத்து நிர்வாக நிறுவனமான கேப்பிட்டலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட், மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் 90 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது. இது, அந்நிறுவனத்தின் உள்ளூர் ஊழியரணியில் ஏறத்தாழ 4 விழுக்காடாகும்.

நிறுவனத்தின் செயல்பாடுகள், வருங்கால வணிகத் தேவைகள், உத்திபூர்வ முன்னுரிமைகளுக்கேற்ப தனது நிறுவனக் கட்டமைப்பை அவ்வப்போது மறுஆய்வு செய்து வருவதாகக் கேப்பிட்டலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனமும் சிங்கப்பூர் தொழில்துறை, சேவைகள் ஊழியர்கள் சங்கமும் இணைந்து வியாழக்கிழமை (செப்டம்பர் 3) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

சிங்கப்பூரில் கேப்பிட்டலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தில் ஏறத்தாழ 2,200 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கேபிட்டல் டவரில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் பணியாற்றுகின்றனர். கேப்பிட்டலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட் ஒரு தொழிற்சங்கம் சார்ந்த நிறுவனமாகும்.

ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து தனக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாக தொழிற்சங்கம் கூறியது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நியாயமான முறையில் இழப்பீடு வழங்கப்படுவதையும் ஊழியர்களின் நலன் பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்ய நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தொழிற்சங்கம் சொன்னது.

தகுந்த சூழலில், நிறுவனத்திற்குள்ளேயே மாற்று வேலை வாய்ப்புகளை வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்படும்.

கடந்த 2025ல் கேப்பிட்டலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட்டின் சிங்கப்பூர் ஊழியரணியில் 77 விழுக்காட்டினர் உள்ளூர்வாசிகளாக இருந்தனர். அவர்களில் 48 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் மேலாண்மை, மூத்த மேலாண்மைப் பொறுப்புகளை வகித்தனர்.

உலக அளவில் 9,500க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள அந்நிறுவனம், 24 விழுக்காட்டு ஊழியர் விலகல் விகிதத்தைப் பதிவு செய்திருந்த போதிலும் பெரிய அளவிலான ஆட்குறைப்புகளை இதுவரை தவிர்த்து வந்துள்ளது. சீனா, இந்தியா உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகளில் அந்நிறுவனம் செயல்படுகிறது.

தற்போது கேப்பிட்டலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட் இணையத்தளத்தில் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட செயல்பாடுகள், சொத்து நிர்வாகம், சந்தைப்படுத்துதல் போன்ற துறைகளில் 60க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளன.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இதனிடையே, வணிக வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்குத் தனது விருந்தோம்பல் பிரிவான தி அஸ்காட் லிமிடெட்டின் பங்குகளை விற்பது குறித்து பரிசீலித்து வருவதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லீ சி கூன் ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற்ற முடிவுகள் அறிவிப்புக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

ஜூன் 30ஆம் தேதியுடன் முடிந்த நிதியாண்டின் முற்பாதியில், அந்நிறுவனம் 13.9 விழுக்காடு உயர்வுடன் $327 மில்லியன் நிகர லாபம் ஈட்டியது.