📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 03, 2026 10:04 PM

வார இறுதியில் வரவேற்கிறது ‘சிஃபாஸ்’

வார இறுதியில் வரவேற்கிறது ‘சிஃபாஸ்’

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் (‘சிஃபாஸ்) ‘பொது வரவேற்பு 2026’ நிகழ்ச்சி ஜூலை 18, 19ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இரு நாள்களும் காலை 9.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை மிடில் ரோட்டில் அமைந்துள்ள சிஃபாஸ் வளாகத்தில் பலதரப்பட்ட வயதுப் பிரிவினரும் இந்தியப் பாரம்பரியக் கலைகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம். பார்வையாளர்கள் பயிலரங்குகள், அறிமுக வகுப்புகள், செயல்முறை விளக்கங்கள், நேரடி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கேற்கலாம்.

பரதநாட்டியம், கதக், குச்சிப்புடி, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, தபேலா, மிருதங்கம், சித்தார், ஹார்மோனியம், கீபோர்டு உள்ளிட்ட பல கலைவடிவங்கள் இங்குக் காட்சிப்படுத்தப்படும். பங்கேற்பாளர்கள் சிஃபாஸ் கலை ஆசிரியர்களையும் மாணவர்களையும் சந்தித்து, பாடநெறிகள் குறித்த ஆலோசனைகளையும் பெறலாம்.

நிகழ்ச்சிக்குப் பதிவு செய்யும் மாணவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்துப் புதிய மாணவர் சேர்க்கைக்கும் $100 பதிவுக் கட்டணம் விலக்கப்படும்.

60 வயதுக்கும் மேற்பட்ட முதியோர்க்கு இரண்டாவது மாதக் கல்விக் கட்டணத்தில் 20 விழுக்காடு கட்டணக் கழிவு வழங்கப்படும். புதிய பதிவுகளுக்கு, இருப்பு உள்ளவரை இலவசப் பரிசுப் பையும் உண்டு.

ஆயுட்கால உறுப்பினராகப் பதிவு செய்வோருக்கு, ஓர் ஆண்டிற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து சிஃபாஸ் இணைப்பு நிகழ்ச்சிகளுக்கான இரண்டு இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும். ஒவ்வொரு புதிய பாடப் பதிவுக்கும் அதிர்ஷ்டக் குலுக்கலில் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்; அதிலிருந்து ஒவ்வொருநாளும் இரவு 9.00 மணிக்கு மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு இரண்டாவது மாதக் கட்டணத்தில் 20 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படும்.

பள்ளியின் புதிய அல்லது தற்போதுள்ள மாணவர்கள் பதிவு செய்யும் குறுகிய காலப் பாடங்களுக்கும் நூல்களுக்கும் 20 விழுக்காடு தள்ளுபடியும், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலைப் பாடங்களுக்குப் பதிவு செய்யும்போது சிறப்புத் தொகுப்புச் சலுகையாக ஆறு மாதக் கல்விக் கட்டணத்தில் 10 விழுக்காடு தள்ளுபடியும் கிடைக்கும். சலுகைகள் அனைத்திற்கும் விதிமுறைகளும் நிபந்தனைகளும் உண்டு. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். https://forms.gle/pMet5oU2wUHtL9Rk6 என்ற இணைப்பின் மூலம் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளலாம்.

1949ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிஃபாஸ், இந்தியப் பாரம்பரிய இசை, நடனம், காட்சிச் கலைகளைக் கற்பித்து வருகிறது. மேல் விவரங்களுக்கு www.sifas.org என்ற இணையத்தளத்தை நாடலாம்.