📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 03, 2026 10:03 PM

புற்றுநோய் அந்திமகாலப் பராமரிப்பு: ஆன்கார்டன்ஸ் திட்டம்

புற்றுநோய் அந்திமகாலப் பராமரிப்பு: ஆன்கார்டன்ஸ் திட்டம்

சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையத்தில் ஆன்கார்டன்ஸ் (Oncordance) என்ற புதிய முன்னோடித் திட்டத்தின்கீழ், முற்றிய நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆரம்பக்கட்டத்திலேயே அறிகுறிகளுக்கான அந்திமகாலப் பராமரிப்பும் வழக்கமான அறுவை சிகிச்சையும் இணைந்து வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2025 ஆகஸ்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இதுவரை 226 நோயாளிகள் பயனடைந்துள்ளனர். அவர்களில் ஏறக்குறைய 80 விழுக்காட்டு நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு முன்பாகவே அந்திமகாலப் பராமரிப்பு மதிப்பீடுகளைப் பெற்றனர்.

லியென் அறக்கட்டளையின் $1 மில்லியன் நிதியுதவியுடன் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட இத்திட்டம், ஈராண்டுகளில் முற்றிய நிலையில் புற்றுநோய் உடைய 1,000 பேருக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பு, முற்றிய நிலையில் புற்றுநோய் உடையோர்க்கு அறுவை சிகிச்சையும் அந்திமகாலப் பராமரிப்பும் வெவ்வேறு பிரிவுகளாகச் செயல்பட்டு வந்தன.

அறுவை சிகிச்சை ஆபத்துகளுக்கு இடையே புற்றுக்கட்டிகளை அகற்றி ஆயுளை நீட்டிக்க முயலும் அந்திமகாலப் பராமரிப்பு, வலியைக் குறைத்து அன்றாட வாழ்க்கையைச் சீராக்க உதவும். தற்போது, அறுவை சிகிச்சை நிபுணர்கள் இவ்விரண்டையும் ஒருங்கிணைத்து சிகிச்சையளிக்க ‘ஆன்கார்டன்ஸ்’ திட்டம் வழிவகுக்கிறது.

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் 18,000க்கும் மேற்பட்ட புதிய புற்றுநோய்ப் பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளோரில் பெரும்பாலோர்க்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

முற்றிய நிலையில் புற்றுநோய் உடையோரில் 80 விழுக்காட்டினருக்கு மனச்சோர்வு, பதற்றம், நாட்பட்ட வலி போன்ற பல்வேறு அந்திமகாலப் பராமரிப்புத் தேவைகள் இருக்கின்றன. புற்றுநோயாளிகளின் விருப்பங்களை அறிந்து, அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கேற்ப சிகிச்சையை மாற்றியமைத்து வழங்க மருத்துவர்களுக்கு இத்திட்டம் உதவுகிறது.

மேலும், தங்கள் வாழ்க்கையின் முக்கிய விருப்பங்களைப் புரிந்துகொண்டு உயில் தயாரித்தல், மத்திய சேம நிதிப் பயனாளிகளை நியமித்தல், குடும்பத்தின் எதிர்காலத்தைச் சிறந்த முறையில் திட்டமிடுதல் போன்ற சொந்த விவகாரங்களை முன்னதாகவே முறைப்படுத்த இத்தகைய விரிவான மருத்துவ உரையாடல்கள் பேருதவியாக இருப்பதாகப் பயனடைந்த புற்றுநோயாளிகள் தெரிவித்துள்ளனர்.