📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 03, 2026 08:04 AM

ஆப்பிள் ஐமெசேஜ் மூலம் புதிய முறையில் மோசடி: காவல்துறை எச்சரிக்கை

ஆப்பிள் ஐமெசேஜ் மூலம் புதிய முறையில் மோசடி: காவல்துறை எச்சரிக்கை

ஆப்பிள் நிறுவனத்தின் ஐமெசேஜ் சேவையைப் பயன்படுத்திப் புதிய முறையில் மோசடிகள் நடந்து வருவதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது.

இதில், டிபிஎஸ் வங்கியின் மோசடி குறித்து விசாரிக்கும் புலனாய்வாளர்கள் அல்லது ஷாப்பி இணைய வர்த்தகத் தளத்தின் ஊழியர்கள்போல மோசடிக்காரர்கள் ஆள்மாறாட்டம் செய்கின்றனர். புதன்கிழமை (செப்டம்பர் 2) வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை இதனைத் தெரிவித்தது.

அவசரமாக உறுதிப்படுத்த வேண்டிய பரிவர்த்தனை ஒன்று நிலுவையில் இருப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐமெசேஜ் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

பரிவர்த்தனை குறித்து மேலும் அறிய, அந்தச் செய்தியில் உள்ள போலித் தொலைபேசி எண்ணை அழைக்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதை நம்பி தொடர்பு கொள்பவர்களிடம், அவர்களின் வங்கி அட்டை விவரங்கள் திருடப்பட்டுவிட்டதாகக் கூறி, அதைச் சரிபார்க்க அட்டை விவரங்களையும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் (ஓடிபி) மோசடிப்பேர்வழிகள் பெறுகின்றனர்.

வங்கி அல்லது இணையக் கணக்குகளில் முறையற்ற பரிவர்த்தனைகள் நடந்த பிறகே, தாங்கள் ஏமாற்றப்பட்டதை மக்கள் உணர்கிறார்கள்.

வங்கிகளோ அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளோ தொலைபேசி வழியே ரகசிய விவரங்களை ஒருபோதும் கேட்கமாட்டா. அடையாளம் தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் சரிபார்க்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான தகவல்களை வங்கியின் அதிகாரப்பூர்வச் செயலி அல்லது இணையத்தளம் மூலம் மட்டுமே சரிபார்க்க வேண்டும்.

ஐமெசேஜ் பயன்படுத்துவோர் புதிய எண்களையும் தேவையில்லாத செய்திகளையும் தடைசெய்யும் நடைமுறைகளைப் பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பின், 1799 என்ற எண்ணில் ‘ஸ்கேம்ஷீல்ட்’ உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.