தனியார் பாலர் பள்ளிகளுக்கு அரசு மானியம்: புதிய வாய்ப்புகள்
அரசாங்க ஆதரவுபெற்ற பங்காளி நடத்துநர் பாலர் பள்ளி திட்டத்தில் இணைவதற்காக அங் மோ கியோவில் 1989ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் ‘கிட்ஸ் அண்ட் கின்ஸ்’ தனியார் பாலர் பள்ளி மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
இந்நிலையில், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்ட புதிய மானியத்தை நல்வாய்ப்பாக அப்பள்ளி கருதுகிறது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் கோ பெய் மிங் ஆகஸ்ட் 28ஆம் தேதி அறிவித்த அம்மானியம் தொடர்பான விவரங்களையும் அதைப் பெறுவதற்கான வழிமுறைகளையும் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு தயாரித்து வருகிறது.
அரசாங்கத்தின் இந்தப் புதிய முன்னெடுப்பு, தகுதியுடைய தனியார் பாலர் பள்ளிகள் அரசாங்க ஆதரவுக் கட்டமைப்பில் இணைய துணைபுரியும்.
கட்டணக் குறைப்பும் தனியார் நிறுவனங்களின் சவால்களும்
தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தபடி, 2028ஆம் ஆண்டு முதல் படிப்படியாகப் பாலர் பள்ளிக் கட்டணம் குறைக்கப்படும்.
2030க்குள் அரசாங்க ஆதரவு பெற்ற பாலர் பள்ளிக் கட்டணம் முழுநேரப் பிள்ளைப் பராமரிப்புக்கு $150 ஆகவும் கைக்குழந்தைப் பராமரிப்புக்கு $300 ஆகவும் குறையும்.
இதனால், தனியார் பாலர் பள்ளிகளுக்கும் அரசாங்க ஆதரவு நிலையங்களுக்கும் இடையிலான கட்டண வேறுபாடு மாதத்திற்குக் கிட்டத்தட்ட $1,000 வரை அதிகரிக்கக்கூடும் என ‘கிட்ஸ் அண்ட் கின்ஸ்’ பாலர் பள்ளியின் செயல்பாட்டு இயக்குநர் கேத்தரின் ஓங் அச்சம் தெரிவித்துள்ளார்.
மேலும், குறைந்த கட்டணம் வசூலிக்கும் நிலையங்களுடன் போட்டியிடவும் உயர்ந்துவரும் செலவினங்களைச் சமாளிக்கவும் சிறிய தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்க ஆதரவு மிகவும் அவசியம் என்றார் அவர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
வெளிப்படைத்தன்மை, நிபுணர்களின் கருத்துகள்
அரசாங்கம் அறிவித்துள்ள புதிய மானியத்தைப் பெறுவதற்கான மதிப்பீட்டுத் தகுதிகள் குறித்த தெளிவான வழிகாட்டுதல்களைப் பாலர் பள்ளி நிர்வாகங்களும் ஆரம்பக்காலக் குழந்தைப் பருவப் பயிற்சி சேவைகளுக்கான சங்கமும் எதிர்பார்க்கின்றன.
2026ஆம் ஆண்டு முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான மூன்றாம் தவணை அரசாங்க ஆதரவுபெற்ற பங்காளி நடத்துநர் பாலர் பள்ளி திட்டத்தின்கீழ் புதிய பள்ளிகளைச் சேர்க்கும் திட்டம் எதுவுமில்லை எனச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியரான சும் சீ வா போன்ற வல்லுநர்கள், அரசாங்க மானியங்களுக்குத் தகுதி பெறாத பட்சத்தில் தனியார் பாலர் பள்ளிகள் தனித்துவமான சிறப்புப் பாடத்திட்டங்களை வழங்கலாம் அல்லது ஒருங்கிணைந்து இயங்கலாம் எனப் பரிந்துரைக்கின்றனர்.
பெற்றோரின் முன்னுரிமை
கட்டணக் குறைப்பு பெற்றோருக்குச் சுமையைக் குறைத்தாலும், இருப்பிடம், பராமரிப்பின் தரம், குறைந்த மாணவ -ஆசிரியர் விகிதம் ஆகியவையே தங்களின் முதன்மை முன்னுரிமை எனப் பெற்றோர் கூறுகின்றனர்.
சமூக மேலாளரான 31 வயது ஷாரின் இஸ்கந்தரும் அவருடைய மனைவியும் முழுநேரப் பணியில் இருக்கின்றனர். தங்களது 16 மாதகால மகளை அரசாங்க ஆதரவுபெற்ற கைக்குழந்தைப் பராமரிப்பு மையத்திற்கு அவர்கள் அனுப்பிவைக்கின்றனர். மானியங்களுக்குப் பிறகு அவர்கள் தற்போது மாதத்திற்குக் கிட்டத்தட்ட $500 கட்டணமாகச் செலுத்துகின்றனர்.
வரவிருக்கும் கட்டணக் குறைப்புகள், குடும்பத்தைப் பராமரிப்பதை மேலும் எளிதாக்க உதவும் என நம்புவதாகத் திரு ஷாரின் கூறினார்.