📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 09, 2026 06:03 PM

டெல்லி போராட்டம்: தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தீவிர பாதுகாப்பு

டெல்லி போராட்டம்: தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தீவிர பாதுகாப்பு

புதுடெல்லி: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி சனிக்கிழமை (அக்டோபர் 10) தலைநகர் டெல்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) தலைமையில் ஏஐஎஸ்ஏ மாணவர் அமைப்பு, விவசாயிகள் அமைப்புகள், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ள டெல்லி காவல்துறை, ஜந்தர் மந்தர் போராட்டத்தைத் தடுக்கும் வகையில், தலைநகர் டெல்லி முழுவதும் 37 அம்சங்கள் கொண்ட தீவிரப் பாதுகாப்பைக் காவல்துறையினர் அமல்படுத்தியுள்ளனர்.

பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் மேலும் 23,000க்கும் மேற்பட்ட காவல், துணை ராணுவப் படையினரைக் குவித்துள்ளது.

போராட்டக் களத்துக்கு வருபவர்களை வழியிலேயே தடுத்து, அவர்களைத் தடுப்பு மையங்களுக்குக் கொண்டு செல்ல 10 தற்காலிகத் தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 60 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. டாக்சி சேவைகள், தங்கும் விடுதிகள், மதுபானக் கடைகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இணையச் சேவை முடக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கூட்டத்தைத் திரட்டப் பயன்படும் 200 சமூக ஊடகக் குழுக்கள், 20 யூடியூப் கணக்குகள், 500 பேரைக் காவல்துறையினர் கண்டறிந்து கண்காணித்து வருகின்றனர். வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை நடவடிக்கைக்கு சிஜேபி கண்டனம்

காவல்துறையின் இந்நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிஜேபி இணை ஒருங்கிணைப்பாளர் ஆசுதோஷ் ரங்கா, “என்ன தடைகள் வந்தாலும் திட்டமிட்டபடி நாளை ஜந்தர் மந்தரைச் சென்றடைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை முன்னெடுப்போம்,” எனத் தெரிவித்துள்ளார்.

தங்கள் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டில் அவசரநிலை போன்ற சூழல் நிலவுவதாகவும் சிஜேபி சாடியுள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

வாக்காளர் பட்டியலின் ‘சிறப்புத் தீவிர திருத்தப்பணி’ மூலம் சுமார் 13 கோடிப் பேர் நீக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறும் எதிர்க்கட்சிகள், ஆணையர் பதவி விலக வலியுறுத்தித் தொடர்ந்து நான்காவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணித் தலைவர்கள், அதிபர் திரௌபதை முர்முவை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9 ) இரவு சந்திக்கின்றனர்.

எனினும், காங்கிரஸ் தலைமையின் தனிப்பட்ட நகர்வுகள் கூட்டணிக் கட்சிகளிடையே சில மனக்கசப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

போராட்டத்தினால் புதுடெல்லியில் போக்குவரத்து பெரிதும் தடைப்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். வேலை, பள்ளி, மருத்துவச் சிகிச்சை, முக்கியத் தேர்வுகளுக்காகச் செல்லவிருந்த பலரின் பயணம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, போராட்டக்காரர்களைக் கையாள முழு சுதந்திரம் கோரிய டெல்லி காவல்துறையின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. “போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் இளைஞர்கள்; அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும்” என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி ஜூலை மாதம் போராட்டத்தை அடுத்து, மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அடுத்து தேர்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டத்தில் சிஜேபி, மற்ற அமைப்புகளுடன் இணைந்து இறங்கியுள்ளது.