📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 09, 2026 07:01 PM

ஆட்டம் இனி வேற லெவல்! தேசம் முழுக்க திருப்பூரின் ஆடை

ஆட்டம் இனி வேற லெவல்! தேசம் முழுக்க திருப்பூரின் ஆடை

- நமது நிருபர் குழு -

ஒரு காலத்தில் திருப்பூரின் தொழிற்சாலைகளில் தயாரான ஆடைகள், நகரத்தின் எல்லையைத் தாண்டி எந்த நாட்டுக்குச் செல்லும் என்பதுதான் கேள்வியாக இருந்தது. இன்று அந்தக் கேள்விக்கு உலகின் பல சந்தைகள் பதில் சொல்கின்றன. ஆனால் தொழிலின் பயணம் அங்கேயே நின்றுவிடவில்லை.

உலகச் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய திருப்பூர், இப்போது தனது பார்வையை இன்னொரு மிகப்பெரிய சந்தையின் மீது திருப்பியுள்ளது. அது... இந்திய சந்தை.

அந்த மாற்றத்துக்கான ஒரு சிறிய முன்னோட்டமாக 'டாக் ஃபேர்ஸ்-2027' (திருப்பூர் அப்பேரல் கனெக்ட் கண்காட்சி) அமைய உள்ளது.

ஜனவரி 3 முதல் 5-ம் தேதி வரை திருப்பூர் ஐ.கே.எப். மைதானத்தில் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியை தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் (டிக்மா) இணைந்து நடத்துகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வினியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், பெரிய சில்லறை நிறுவனங்கள், தொடர் விற்பனை நிலையங்கள், பெருநிறுவன கொள்முதல் பிரிவினர், சீருடை வாங்கும் நிறுவனங்கள், கொள்முதல் முகவர்கள் உள்ளிட்டோரை திருப்பூருடன் இணைப்பதே இதன் முக்கிய நோக்கம்.

இதன் பின்னால் இருப்பது ஒரு கண்காட்சி செய்தியைவிடப் பெரிய தொழில் மாற்றம்.

ரூ.46 ஆயிரம் கோடி ஏற்றுமதி

2025-26-ம் நிதியாண்டில் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி ரூ.46 ஆயிரம் கோடியை எட்டியது. இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்கு அறுபது சதவீதம். இது தொழில்துறையின் ஏற்றுமதி வலிமையை காட்டும் ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் உள்நாட்டுச்சந்தை.

2025-26-ல் திருப்பூரின் உள்நாட்டு விற்பனை ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு இருந்ததாக தெரிகிறது. இருப்பினும், இதை ஓர் அதிகாரபூர்வத் தரவாகக் கருத முடியாது. திருப்பூரின் வளர்ச்சிக் கதை இனி ஏற்றுமதி ஆர்டர்களை மட்டும் சார்ந்ததாக இல்லை. நாட்டுக்குள் உருவாகும் ஆடைச் சந்தையும் நகரத்தின் அடுத்த முக்கிய வளர்ச்சிக் களமாக மாறி வருகிறது.

ரூ.16 லட்சம் கோடி சந்தை

இதற்கான பின்னணியும் பெரியதாக உள்ளது. 'கேர் எட்ஜ்' மதிப்பீட்டின்படி, இந்தியாவின் ஆடை சில்லறைச் சந்தை 2024-25-ல் ரூ.9.30 லட்சம் கோடி அளவில் இருந்தது. இது 2029-30-ல் ரூ.16 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனையின் பங்கு 41 சதவீதமாக உள்ளது. இந்தப் பிரிவு ஆண்டுக்கு 10 முதல் 13 சதவீதம் வரை வளரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இணையவழி விற்பனையும் முக்கிய வளர்ச்சி காரணியாக உள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட ஆடைச் சில்லறை விற்பனையில் தற்போது 22 சதவீதமாக இருக்கும் இணையவழி விற்பனை, 2030-க்குள் 25 சதவீதத்தை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், திருப்பூருக்கு முன்னால் உருவாகும் சந்தை சாதாரணமானது அல்ல. இந்தியாவின் நகரங்கள் மட்டுமின்றி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் ஆடை நுகர்வு அதிகரித்து வருகிறது. பெரிய சில்லறை நிறுவனங்களும் அந்த நகரங்களை நோக்கி விரிவடைந்து வருகின்றன.

ரூ.50 ஆயிரம் கோடி இலக்கு

இந்த வளர்ச்சியை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், 2030-க்குள் திருப்பூரின் உள்நாட்டு வணிகத்தை ரூ.50 ஆயிரம் கோடி மற்றும் அதையும் தாண்டுவதைத்தான் தொழில்துறை இலக்காகக் கொண்டுள்ளது. அதே காலகட்டத்தில் ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்தும் இலக்கும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக பருத்தி ஆடைகளுடன் செயற்கை மற்றும் கலப்பு இழை ஆடைகள் தயாரிப்பையும் அதிகரிக்க தொழில்துறை திட்டமிட்டு வருகிறது.

ஏற்றுமதியைப் போலவே உள்நாட்டு சந்தையிலும் வளர வேண்டுமெனில், உற்பத்தி மட்டும் போதாது. தயாரிப்புகளை மாநிலம் தோறும் கொண்டு செல்லும் வினியோக வலையமைப்பு, பெரிய சில்லறை நிறுவனங்களுடனான தொடர்பு, நிறுவனங்களுக்கான சீருடை ஆர்டர்கள், இணையவழி விற்பனை மற்றும் புதிய வணிகக் கூட்டாண்மைகள் தேவை.

இதுதான் 'டாக் ஃபேர்ஸ்-2027' போன்ற கண்காட்சிகளின் பின்னணியில் இருக்கும் முக்கியமான தொழில் நோக்கம்.

திருப்பூரின் அடுத்த போட்டி

திருப்பூரின் ஏற்றுமதி வலிமை ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசின் வணிகப் புள்ளிவிவரங்கள் மற்றும் பகுப்பாய்வு இயக்குனரகம் வெளியிட்ட தரவுப்படி, 2025-26-ல் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதியில் திருப்பூர் மாவட்டம் நாட்டின் முன்னணி ஏற்றுமதி மாவட்டமாக இருந்தது.

திருப்பூர் இந்தியாவின் மிகப்பெரிய ஆடை உற்பத்தி மையங்களில் ஒன்றாக இருக்கிறது. இப்போது சவால், அந்த உற்பத்தி வலிமையை இந்தியாவின் வளர்ந்து வரும் ஆடை நுகர்வு சந்தையுடன் இன்னும் ஆழமாக இணைப்பது.

நேற்று வரை திருப்பூரின் தொழிற்சாலைகளில் தயாரான ஆடை, உலகத்தின் பல நாடுகளுக்குச் சென்றது. இனி அதே ஆடை, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் புதிய வாடிக்கையாளரைத் தேடிச் செல்ல வேண்டும்.

ஒரு புதிய வினியோகஸ்தர்... ஒரு புதிய நகரம்... ஒரு புதிய சில்லறை விற்பனைச் சங்கிலி... ஒரு புதிய நிறுவன ஆர்டர்...

இவை ஒவ்வொன்றும் திருப்பூரின் அடுத்த வளர்ச்சிக் கதையின் ஒரு வரியாக மாறலாம்.

உலகத்தை நோக்கி ஓடிய திருப்பூரின் தொழில் 'ரேஸ்', இப்போது நம் தேசம் முழுக்க வேகமெடுக்கத் தயாராகிறது.

எங்கே செல்கிறது?இந்தியாவின் ஆடைச் சில்லறை சந்தை அடுத்த சில ஆண்டுகளில் வேகமாக விரிவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனை, இணையவழி விற்பனை மற்றும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களின் நுகர்வு அதிகரிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. பெரிய சில்லறை நிறுவனங்கள் புதிய நகரங்களுக்குள் விரிவடைவதும், இணையவழி விற்பனை அதிகரிப்பதும் உற்பத்தியாளர்களுக்கு புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இதனால், நாடு முழுவதும் நேரடி வணிகத் தொடர்புகளை உருவாக்குவது திருப்பூர் உற்பத்தியாளர்களுக்கு முக்கியமாகிறது.ஏற்றுமதி தாண்டியஅடுத்த இலக்குதிருப்பூரின் தொழில் வலிமை இதுவரை பெரும்பாலும் ஏற்றுமதியுடன் இணைத்துப் பார்க்கப்பட்டது. ஆனால் உள்நாட்டு சந்தையின் வளர்ச்சி, தொழில்துறையின் கவனத்தை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை நோக்கித் திருப்பியுள்ளது. புதிய வினியோகஸ்தர்கள், பெரிய சில்லறை நிறுவனங்கள், நிறுவனங்களுக்கான கொள்முதல், சீருடை தயாரிப்பு மற்றும் இணையவழி விற்பனை போன்ற துறைகளில் வாய்ப்புகளைப் பெருக்குவது, உள்நாட்டு வணிகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முக்கிய வழியாக பார்க்கப்படுகிறது.திருப்பூர் பின்னலாடை வணிகம்2025-26பின்னலாடை ஏற்றுமதி - ரூ.46,000 கோடிஉள்நாட்டு விற்பனை - ரூ.30,000 கோடி(அதிகாரபூர்வத் தரவல்ல)உள்நாட்டு வணிக இலக்கு - ரூ.50,000 கோடிஏற்றுமதி இலக்கு - ரூ.1 லட்சம் கோடிஇந்திய ஆடைச் சந்தை - வளர்ச்சிப்பாதை- 2024-25-ல் இந்திய ஆடைச் சில்லறைச் சந்தை - ரூ.9.30 லட்சம் கோடி- 2029-30-ல் எதிர்பார்க்கப்படும் சந்தை அளவு - ரூ.16 லட்சம் கோடி- ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனையின் பங்கு - 41 சதவீதம்- அந்த ஒழுங்கமைக்கப்பட்ட சந்தையில் இணையவழி விற்பனை - தற்போது 22 சதவீதம்2030-ல் 25 சதவீதம் என மதிப்பீடு