தமிழ் கலாச்சாரத்தில் வேரூன்றிய பக்தியே தமிழர்களின் அடையாளமான ஈடுபாட்டுக்கும் தெம்புக்கும் அடிப்படை: மலேசியாவில் சத்குரு உரை
தமிழ் கலாச்சாரத்தில் வேரூன்றிய பக்தியே தமிழர்களின் அடையாளமான ஈடுபாட்டுக்கும் தெம்புக்கும் அடிப்படை: மலேசியாவில் சத்குரு உரை
கோலாலம்பூர்: தமிழர்களின் தனித்துவமான அடையாளங்களாகத் திகழும் ஈடுபாட்டுக்கும் தெம்புக்கும், தமிழ் கலாச்சாரத்தில் வேரூன்றிய பக்தியே அடிப்படை என மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சத்குரு பேசினார்.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் 'மஹாசத்சங்கம்' நிகழ்ச்சி மலேசியாவின் பத்து மலையில் நேற்று (08/10/2026) கோலாகலமாக நடைபெற்றது. சத்குருவின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மலேசியா மட்டுமின்றி ஆசிய-பசிபிக் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சத்குரு பேசுகையில், “உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஈஷா தன்னார்வத் தொண்டர்களாக உள்ளனர். ஆனால், எங்கு சென்றாலும் ஒரு குறிப்பிட்ட அளவில் தமிழ் தன்னார்வத் தொண்டர்களைப் பார்க்க முடியும். 1,000 பேர் இருந்தால்கூட, அதில் 50 பேர் தமிழ் தன்னார்வத் தொண்டர்களாக இருந்தால், இவர் தமிழர் என்று நான் கூறிவிடுவேன். அவர்களின் முகத்தைப் பார்க்காமலேயே, அவர்களிடம் இருக்கும் தெம்பு மற்றும் எதிலும் அவர்கள் காட்டும் ஈடுபாட்டின் மூலம் தமிழர்களை அடையாளம் காண முடியும்.
தமிழர்களின் இந்தத் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, அவர்களின் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள பக்தி உணர்வு. தமிழ்நாட்டின் அடையாளமே கோயில்கள். நமது கலாச்சாரத்தில் பக்தி என்பது ஒரு கருத்தாகவோ, யாரோ கற்றுக் கொடுத்த ஒன்றாகவோ மட்டும் இல்லை. மரம், மாடு, பாம்பு, மலை, மேகம் என இயற்கையின் பல்வேறு அம்சங்களையும், மனிதர்களையும் கூட வணங்கும் தன்மை நமது கலாச்சாரத்தில் உள்ளது. படைப்பின் மூலம் அனைத்திலும் இருக்கிறது என்ற உணர்வு நம்முள் ஆழமாகப் பதிந்திருப்பதே இதற்குக் காரணம்.
ஆன்மீகம் என்பது பல்வேறு வழிகளைக் கொண்டது. நம்முடைய புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி அல்லது நம்முடைய சக்தியை ஒரு குறிப்பிட்ட நிலைக்குக் கொண்டு வந்து, அதன் மூலம் நாம் வளர முடியும். நம்முடைய உயிர்ச் சக்தியை நம்முடைய கையில் எடுத்துக்கொண்டு ஒரு விதமாக வாழவும், வளரவும் முடியும். ஆனால் பக்தி என்பது மிகவும் எளிமையானது. அது எல்லோருக்கும் பொதுவானது.
உங்களிடம் உடல் இருக்கிறது, மனம் இருக்கிறது, புத்திசாலித்தனம் இருக்கிறது, சக்தி இருக்கிறது. ஆனால் உங்கள் உணர்வு என்பது இவை அனைத்தையும்விட சக்தி வாய்ந்தது. மனிதனுக்குள் இருக்கும் உணர்வு அல்லது உணர்ச்சி என்பது மிகவும் தீவிரமானது. அந்த உணர்ச்சியை நாம் மிகவும் இனிமையான ஒரு நிலைக்குக் கொண்டு வந்தால், அதற்குப் ‘பக்தி’ எனக் கூறுவோம்.
ஞானத்தின் பாதையில் செல்ல மிகுந்த கூர்மையான அறிவு தேவைப்படலாம். சக்தி நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தீவிரமான சாதனை தேவைப்படலாம். ஆனால் பக்திக்கு அதிக நேரமோ, பெரிய சடங்குகளோ தேவையில்லை. நாம் இருக்கும் நிலையை மாற்றிக்கொள்வதே போதுமானது.
கடவுளைப் பார்ப்பது மட்டுமல்லாமல், ஒரு மனிதரை, ஒரு விலங்கை அல்லது நம்மைச் சுற்றியுள்ள எதையும் பக்தியுடன் பார்க்க முடியும். படைத்தலைக் கவனித்துப் பார்த்தாலே பக்தி மலரும்.
இளைஞர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. பதின்ம வயது குழந்தைகள் தெம்பாகவும், உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் இருக்க வேண்டும். ஆனால் 15 வயதிற்குட்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது அந்தக் குழந்தையைப் பற்றியது மட்டுமல்ல. நமது சமூகத்தை நாம் சரியாக வழிநடத்தவில்லை என்பதையும், இதற்குப் பின்னால் இருக்கும் அடிப்படையான பிரச்சினையை நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பதையும் காட்டுகிறது. ஆகையால் இதன் பின்னுள்ள காரணங்களைப் புரிந்துகொண்டு, நமது சமூகத்தை இன்னும் சிறப்பாக வழிநடத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது” எனப் பேசினார்.
முன்னதாக அக். 7-ஆம் தேதி, கோலாலம்பூரில் உள்ள மலேசியா சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற “விழிப்புணர்வான உலகைக் கட்டமைத்தல்” என்ற நிகழ்ச்சியில் சத்குரு உரையாற்றினார். இதில் பல்வேறு முக்கிய நிறுவனங்களைச் சேர்ந்த தலைமைச் செயல் அதிகாரிகள், நிறுவனர்கள், இயக்குநர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் சத்குரு பேசுகையில், “ஐ. நா சபையின் அமைப்புகள், இந்தப் பூமியில் இன்னும் 60 அறுவடைக் காலங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகக் கூறுகின்றன. அதாவது, இன்னும் 40 முதல் 45 ஆண்டுகளுக்குப் பிறகு உணவு உற்பத்தி செய்வது மிகவும் கடினமாகிவிடும். இப்போது நாம் நமக்கான உணவையோ, நமது குழந்தைகளுக்கான உணவையோ எடுத்துக்கொள்ளவில்லை. இன்னும் பிறக்காத குழந்தைகளுக்குச் சொந்தமான உணவை உண்டு கொண்டிருக்கிறோம். எனவே, மண் வளத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு நாடும் தனது கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.
ஈஷா அறக்கட்டளை சார்பில் மலேசியாவுக்கான மண் வளக் கொள்கையை உருவாக்கி, மலேசிய அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். அந்தக் கொள்கையைப் பிரதமர் மற்றும் தொடர்புடைய அமைச்சர்களிடம் கொண்டு சேர்த்து, தொடர்ந்து வலியுறுத்துங்கள். படிப்படியாக மாற்றம் நிகழும். உலகின் 192 நாடுகளுக்கான மண் வளக் கொள்கைகளை உருவாக்க 2 முதல் 2.5 ஆண்டுகள் ஆனது. ஒவ்வொரு நாட்டின் நில அமைப்பு, மண்ணின் தன்மை, பொருளாதாரச் சூழல் மற்றும் விவசாய நடைமுறைகளுக்கு ஏற்ப இக்கொள்கைகளை உருவாக்கினோம். இவற்றில் 72 முதல் 74 நாடுகள் வரை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஏற்றுக்கொண்டுள்ளன,” என சத்குரு தெரிவித்தார்.
சத்குருவின் மலேசிய வருகையின் ஒரு பகுதியாக வரும் அக். 11-ஆம் தேதி ‘Soak in the Ecstasy of Enlightenment’ என்ற ஒரு நாள் அனுபவப்பூர்வமான சிறப்பு நிகழ்ச்சியையும் அவர் வழிநடத்தவுள்ளார். சத்குருவின் வழிகாட்டுதலில் தியானம் மற்றும் யோகா மூலம் ஆன்மீகத்தின் ஆழமான பரிமாணங்களை அனுபவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.