மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக அபார வெற்றி
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழக (தவெக) வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனைவிட 19,000 வாக்குகள் அதிகமாகப் பெற்று தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றுள்ளார்.
தாராபுரம் தொகுதியிலும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்யபாமா வெற்றி பெற்றுள்ளார். இவர், திமுக வேட்பாளர் சுகன்யாவைவிட 9,471 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வெற்றிபெற்றதன் மூலம் தவெகவின் பலம் 109ஆக அதிகரித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசிலடித்தும் இனிப்புகள் வழங்கியும் அவர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல சென்னை பனையூர் தவெக தலைமை அலுவலகத்திலும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இடைத்தேர்தலில் 179,337 வாக்குகள் பதிவான நிலையில் கடந்த பொதத் தேர்தலைவிட குறைவான வாக்குகள் பதிவானதாக விமர்சனங்கள் எழுந்தன.
தாராபுரம் இடைத்தேர்தலில் 80.30 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. இத்தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 66,841, திமுக வேட்பாளர் சுகன்யா 57,370, அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகள் பெற்றனர்.
86.26% அதிகபட்ச வாக்குப்பதிவு கண்ட மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலு 61,470 வாக்குகள், திமுக வேட்பாளர் பரந்தாமன் 43,916 வாக்குகள், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 38,770 வாக்குகள் பெற்றனர். நாம் தமிழர் கட்சி, சிபிஎம் (1,441) வாக்குகள் பெற்றனர். இத்தொகுதியில் 27 பேர் போட்டியிட்டனர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கும் தவெகவும் இடையே தாராபுரத்தில் போட்டி கடுமையாக இருந்தது.
தவெக கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு நடைபெற்ற முதல் இடைத்தேர்தல் என்பதால், தவெக அரசின் நான்கு மாத கால ஆட்சிக்கு மக்களின் மதிப்பீடாகவே இது பார்க்கப்படுகிறது.
சிங்கப்பெண் அதிரடிப்படை, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், தாய்மாமன் சீர், அண்ணன் சீர் உள்ளிட்ட திட்டங்களை தவெக செயல்படுத்தியிருந்தாலும் மக்களின் ஒருமித்த ஆதரவை அக்கட்சி பெறவில்லை என்பதை இந்த முடிவுகள் காட்டுவதாக அரசியல் கணிப்பாளர்கள் கருத்துரைத்தனர்.
அடுத்து காலியாக உள்ள ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும்.