மனு அளிக்க சென்றவர்களை தடுத்து நிறுத்திய போலீஸ்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் ஊராட்சி துறையூரில் நச்சுக்காற்று, கழிவுநீரால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி தொழிற்சாலைகளை மூடக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கச்சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு, பதட்டம் ஏற்பட்டது.
துறையூரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள சிப்காட் வளாகத்தில் செயல்படும் இரு தொழிற்சாலைகளில் இருந்து துர்நாற்றத்துடன் நச்சுக்காற்று வெளியேறுவதாகவும், கழிவுநீர் திறந்தவெளியில் விடப்படுவதால் நிலத்தடி நீர், விவசாய நிலங்கள், கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளிக்க துறையூர் மக்கள் வேனில் புறப்பட்டனர். கங்கைகொண்டான் துறையூர் பகுதியில் வேனை போலீசார் தடுத்து நிறுத்தி, 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். இதை ஏற்க மறுத்த பொதுமக்கள் வேனில் ஏறி புறப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர் ஆல்வின் பிரிஜித் மேரி மற்றும் 2 போலீசார் மட்டுமே இருந்தனர்.
வேனை நிறுத்துமாறு கூ றியும் பொதுமக்கள் கேட்காததால், அவர்களை தடுக்க போலீசார் முயன்ற னர். பெண் இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் தள்ளியதாகவும், இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஒருவரை தாக்கியதாகவும் புகார் எழுந்தது.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு நடந்து பதட்டம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து துறையூர் மக்கள் கலெக்டர் அலுவலகம் சென்று, அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.