📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 29, 2026 10:01 AM

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்குகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்குகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

மும்பை: மஹாராஷ்டிராவில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், அவரது மாமனார் வாசு பாக்னானி மற்றும் 'பனோரமா ஸ்டுடியோஸ்' நிறுவனம் உட்பட 12 இடங்களில், வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் கடந்தாண்டு போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நிலையில், நிதி முறைகேடு, திரைப்பட தயாரிப்பு பெயரில் வெளிநாடுகளுக்கு பணம் கடத்தல், வரி ஏய்ப்பு போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். மாடல் அழகியான இவர், தமிழில் தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, அயலான், இந்தியன் - 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வரும் நவம்பரில் திரைக்கு வர உள்ள ராமாயணா படத்தில் சூர்ப்பனகையாகவும் இவர் நடித்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த பிரபல ஹிந்தி பட தயாரிப்பாளர் வாசு பாக்னானியின் மகன் ஜாக்கியை இவர் திருமணம் செய்துள்ளார். 'பூஜா என்டெர்டெயின்மென்ட்' என்ற பெயரில் திரைத்துறையைச் சார்ந்த வணிக நிறுவனத்தை, வாசு பாக்னானி மற்றும் அவரது மகன் ஜாக்கி நடத்தி வருகின்றனர். இருவரும் திரைப்பட தயாரிப்பு, வெளிநாட்டு வினியோக உரிமை உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களை தொடர்ந்து, நடிகை ரகுல் ப்ரீத் சிங், வாசு பாக்னானி, பிரபல ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனமான 'பனோரமா ஸ்டுடியோஸ்' உரிமையாளர் குமார் மங்கத் பாதக் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில், மும்பை வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். வீடுகள், அலுவலகங்கள், திரைப்பட ஸ்டுடியோ உட்பட 12 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

திரைப்படத் துறை சார்ந்த செயல்பாடுகள் மூலம் வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகார்களை தொடர்ந்து, இந்த சோதனை நடத்தப்பட்டது. திரைப்பட படப்பிடிப்பு, வெளிநாட்டு வினியோகம் மற்றும் தயாரிப்பு பெயரில் வெளிநாடுகளுக்கு பெருமளவில் பணம் அனுப்பியதாக வந்த தகவலின் அடிப்படையிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதன் வாயிலாக, பெரிய அளவிலான வரி ஏய்ப்பு, நிதி முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த 2021 - 22ம் ஆண்டுகளில், தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய போதைப்பொருள் வழக்கு மற்றும் பண மோசடி விசாரணை தொடர்பாக, ரகுல் ப்ரீத் சிங்கிற்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தது. அதேபோல், கடந்தாண்டு இறுதியில், இவரின் சகோதரர் அமன் மீது, மும்பை போதைப் பொருள் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து ஐந்து முறை இவர் போதைப்பொருள் வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார். இதன் அடிப்படையிலும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு சொந்தமான இடங்களில், வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பிருக்கும் கோணத்திலும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நள்ளிரவு வரையிலும் சோதனை நீடித்ததாகக் கூறப்படும் நிலையில், சோதனை குறித்தும், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், வருமான வரித் துறையினர் தரப்பில் எந்த அறிக்கையும் வெளியிடப் படவில்லை.