போக்குவரத்து அபராதம் செலுத்தவில்லையா? தொகையை மின்கட்டணத்துடன் இணைக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி யோசனை
போக்குவரத்து அபராதம் செலுத்தவில்லையா? தொகையை மின்கட்டணத்துடன் இணைக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி யோசனை
புதுடெல்லி: சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து விதிகளை அமல்படுத்துவது மற்றும் விபத்தில் சிக்கியவர்களுக்கான சிகிச்சையை மேம்படுத்துவது தொடர்பான பொதுநல வழக்கு, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் ரூ.45,000 கோடி அளவுக்கு இ-சலான் அபராதம் விதிக்கப்பட்டதில், இதுவரை ரூ.25,000 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ரூ.20,000 கோடி பெருமளவு நிலுவையில் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கணக்கிலடங்கா இ-சலான்களை வழங்குவது மட்டும் போதாது, அதை வசூலிப்பதே முக்கியம் எனத் தெரிவித்த நீதிபதிகள், ”மக்கள் போக்குவரத்து அபராதத்தைச் செலுத்தவில்லை என்றால், அந்தத் தொகையை அவர்களின் மின்சாரக் கட்டண ரசீதுடன் சேர்த்து விடுங்கள்.
மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற அச்சத்தில் அவர்கள் கட்டாயமாகக் கட்டணத்தைச் செலுத்துவார்கள். இதற்கான மாற்று வழியை நாம் கண்டுபிடித்துதான் ஆக வேண்டும் ” என்று கருத்து தெரிவித்தனர். அதிகாரிகள் கள அளவில் இறங்கிச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி பர்திவாலா, ”வாகனங்களைத் திடீர் சோதனை செய்யுங்கள். அப்போது இ-சலான் அபராதம் செலுத்தப்படாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்வதற்கான அவசிய நடவடிக்கைகளை எடுங்கள் ” என்றும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.