மேகதாது அணை கட்ட அடிக்கல் நாட்டுவோம்
மேகதாது அணை கட்ட அடிக்கல் நாட்டுவோம் என்ற கர்நாடக மந்திரியின் பேச்சுக்கு வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ள அறிக்கையில், கர்நாடக மாநிலம் மண்டியாவில் நேற்று நடந்த கூட்டத்தில் அந்த மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி செலுவராயசாமி பேசும்போது, “மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதே காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு. விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த முடிவும் எடுக்கப்படாது.
அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதத்திற்குள் மேகதாதுவில் புதிதாக அணை கட்ட அடிக்கல் நாட்டப்படும். இதுதான் கர்நாடக அரசின் உறுதியான முடிவு. முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது தமிழகத்திற்கு மிகக்குறைந்த அளவே காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பணிகள் நிறைவு
அணை கட்டுவதற்கான அனைத்து தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பணிகளும் நிறைவடைந்து விட்டன. மத்திய நீர்வள ஆணையத்திடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு தான் அனுமதி தர வேண்டுமே தவிர, தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் தொடர்ந்து கூறி வருகிறார்.
இணை மந்திரி
தமிழகம் கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக மேகதாது அணையை எதிர்த்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து விட்டது. காவிரி மேலாண்மை ஆணையமும், மத்திய அரசும் எங்களுடைய விரிவான திட்ட அறிக்கையை பெற்றுள்ளன. அவர்கள் அதனை ஆய்வு செய்வார்கள். இந்த விவகாரம் இப்போது மத்திய அரசின் கைகளில் உள்ளது. தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்றும் கர்நாடக முதல்-மந்திரி குறிப்பிட்டிருக்கிறார்.
நிலுவையில் வழக்கு
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆனால் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் முனைப்பாக இருப்பதை காணும்போது மத்திய பா.ஜ.க. அரசு மறைமுகமான அனுமதியை வழங்கி உள்ளதோ என்ற ஐயப்பாடு எழுகிறது.
காவிரிப்படுகை மாவட்டங்களில் காவிரி நீர் வரத்து இல்லாமல் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் கருகி கொண்டிருக்கின்றன. உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கர்நாடக அரசு காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்து விடவில்லை.
இந்த சூழலில், மேகதாது அணை கட்ட அடிக்கல் நாட்டுவோம் என்று கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.
கூடுதல் கவனம்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய அணை கட்டும் திட்டத்துக்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தியும் சட்டப்பேரவையில் ஜூன் 19-ந்தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.