📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 08, 2026 09:03 PM

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: நாளை வெளியாகும் முடிவுகள்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: நாளை வெளியாகும் முடிவுகள்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: நாளை வெளியாகும் முடிவுகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Published : October 8, 2026 at 1:37 PM IST

செங்கல்பட்டு/திருப்பூர்: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (அக்டோபர் 9) நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், நாளை இந்த இரண்டு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதிக்கான இடைத்தேர்தலில் மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 80.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் 89.9 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது 9.65 சதவீதம் குறைவாக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட 642 பேலட் யூனிட்கள், 321 கன்ட்ரோல் யூனிட்கள் மற்றும் 337 வி.வி.பேட் இயந்திரங்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நாளை காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் இரண்டு மேசைகளில் எண்ணப்படுகின்றன. காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்குகிறது.

320 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 14 மேசைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் தனித்தனியாக அறிவிக்கப்படும். இதையடுத்து, எல்.ஆர்.ஜி. கல்லூரியில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து 23 சுற்றுகளும் நிறைவடைந்து, தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு, தாராபுரம் தொகுதியின் இறுதி தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி தொகுதியில் இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில், அங்கு 86.26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் 93.22 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையொட்டி செங்கல்பட்டு அடுத்த ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மதுராந்தகம் தொகுதியில் உள்ள 285 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் செங்கல்பட்டு அருகே ஆத்தூரில் உள்ள வாக்கு என்னும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு மையத்தைச் சுற்றிலும் மூன்று அடுக்கு காவல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்களும், இரண்டாவது அடுக்கில் துப்பாக்கி ஏந்திய தமிழ்நாடு காவல்துறையினரும், மூன்றாவது அடுக்கில் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த 70 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உட்பட மொத்தம் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகளை எண்ணுவதற்கும் தனியாக மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மொத்தமாக 21 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, சுற்று வாரியாக முடிவுகள் அறிவிக்கப்படும். அனைத்து சுற்றுகளும் முடிவடைந்த பின்னர் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.