சட்டசபையில் இன்று காவல் துறை மானியக் கோரிக்கை விவாதம்: சட்டம்
சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மானியக் கோரிக்கை விவாதம்
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஆகஸ்டு 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது.
முதல்-அமைச்சர் கையில் உள்ள துறை
இந்த விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேச இருக்கிறார்கள்.
காவல் துறை மானியம் என்பதால், தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேச இருக்கிறார்.
திங்கட்கிழமை பதிலுரை
நாளை (4-ந் தேதி) கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை நாள் என்பதால், சட்டசபை நிகழ்வுகள் கிடையாது. தொடர்ந்து 2 நாட்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை வருவதால், சட்டசபைக்கு விடுமுறை நாளாகும்.
அடுத்து, 7-ந் தேதி (திங்கட்கிழமை) சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. அன்றைய தினம் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேச இருக்கிறார். நிறைவாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட உள்ளார்.