விருத்தாசலம் அருகே கூழாங்கற்கள் கடத்திய 5 பேர் கைது
விருத்தாசலம் அருகே கூழாங்கற்கள் கடத்திய 5 பேர் கைது
*2 லாரிகள், கார் பறிமுதல்
விருத்தாசலம் : கூழாங்கற்கள் கடத்தி சென்ற 2 லாரிகள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 5 பேரை கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டி.வி.புத்தூர்- கிளிமங்கலம் சாலையில் உள்ள குறுக்கத்தஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக அடுத்தடுத்து வந்த 2 லாரிகள் மற்றும் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சட்டவிரோதமாக சுமார் 6 யூனிட் கூழாங்கற்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கூழாங்கற்கள் கடத்தி வந்த 2 லாரிகள் மற்றும் அதற்கு உடந்தையாக வந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்ட விருத்தாசலம் பாலக்கொல்லை தெற்கு தெருவை சேர்ந்த அஜித் (22), ஏமப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயவேல் (28), புதுப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் (42), அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் (38) மற்றும் ஏமப்பட்டு வடக்கு தெருவை சேர்ந்த பாலகுரு (31) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டர்.