📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 29, 2026 03:03 AM

‘சிவகார்த்திகேயனுடன் எந்த மனக்கசப்பும் இல்லை’

‘சிவகார்த்திகேயனுடன் எந்த மனக்கசப்பும் இல்லை’

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை(எஸ்.கே.27), ‘பார்க்கிங்’ இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு

முன்னதாக சிவகார்த்திகேயனின் 27-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குவார் என தகவல்கள் வெளியான நிலையில், அந்த படம் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் 2024-ம் ஆண்டு வெளியான ‘கோட்’ திரைப்படத்தில், சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இதனிடையே வெங்கட் பிரபுவின் அடுத்த படம் தாமதமானது குறித்து அவரது தந்தையும், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான கங்கை அமரன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

அதில், “வெங்கட் பிரபுவிடம் நல்ல கதைகளும், ஐடியாக்களும் உள்ளன. அவர் ஒரு நடிகரை நம்பி கதையெல்லாம் தயார் செய்து, முன் தயாரிப்புப் பணிகளுக்காக அமெரிக்கா வரை சென்று வந்த நிலையில், அந்த நடிகர் மற்றொரு படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதே இயக்குனருடன் தொடர்ந்து படங்கள் பண்ணப்போவதாகக் கூறி வெங்கட் பிரபுவின் படத்தை தள்ளிப்போட்டுவிட்டார்” என்று கங்கை அமரன் கூறியிருந்தார்.

அவர் கூறிய தகவல்களை வைத்து சம்பந்தப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயன்தான் என சமூக வலைதளங்களில் பலர் கருத்து பதிவிட்டு விமர்சிக்க தொடங்கினர். இந்நிலையில், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குநர் வெங்கட் பிரபு இது தொடர்பாக தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

வெங்கட் பிரபு விளக்கம்

“சிவகார்த்திகேயன் எப்போதும் எனக்கு ஒரு அன்பான நண்பர் மற்றும் சகோதரர். பலவிதமான யூகங்களும், சர்ச்சைகளும் சுற்றி வருகின்றன. ஒரு தந்தையாக, தன் மகனின் படம் தாமதமாகும்போது ஆதங்கம் ஏற்படுவது இயல்புதான். அவருக்கு(கங்கை அமரனுக்கு) முழுமையான சூழல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்காக நான் அவரை நிச்சயம் குறை சொல்ல மாட்டேன்.

நான் என் வேலையைப் பொறுத்தவரை மிகவும் அமைதியானவன். தொழில்முறை விஷயங்களை என் தந்தை உள்பட யாருடனும் விரிவாக விவாதிக்க மாட்டேன். பல காரணங்களால் இந்த திட்டம் தள்ளிப்போனதே தவிர, இதில் எந்தவித மனக்கசப்பும் இல்லை.

நேரம் கூடிவந்து, ஒரு நல்ல கதை அமைந்தால் நான் நிச்சயமாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவேன். எனவே, தயவுசெய்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். நான் எனது அடுத்த வேலையில் கவனம் செலுத்தி வருகிறேன். சகோதரர் சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.