மலேசிய வானம் தெளிவடைகிறது
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சில பகுதிகளில் தெளிவான வானம் திரும்பியிருப்பதால் பெற்றோர் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். ஆனால், புகைமூட்டம் மீண்டும் திரும்பி, பள்ளிகள் மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ என்ற எச்சரிக்கை உணர்வில் அவர்களில் பலர் உள்ளனர்.
வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு, காற்றின் தரம் மேம்படுவதால் அவர்களின் அன்றாட நடைமுறைகளில் இடையூறுகளைக் குறைக்கிறது. இருப்பினும் நிலைமை மோசமடைந்தால் வேலையையும் குழந்தைப் பராமரிப்பையும் சமாளிக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஷா ஆலமைச் சேர்ந்த தொழில்நுட்ப நிர்வாகி மெலிசா போ, 38, பள்ளி மூடப்பட்டால், தனது ஏழு, 11 வயதுடைய இரு குழந்தைகளைப் பராமரிப்பது தனது நீக்குப்போக்கான வேலை நேர ஏற்பாட்டால் எளிதாகும் என்றார்.
“நான் வீட்டிலிருந்தே வேலை செய்ய முடியும். எனவே அவர்களைப் பார்த்துக்கொள்வது எனக்குப் பெரிய பிரச்சினையாக இருக்காது,” என்றார் அவர்.
புகைமூட்டம் நீடிக்கும் வரை குழந்தைகளை முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே வைத்திருப்பதாகவும் அவர்கள் பள்ளிப் பாடங்களைத் தொடர்ந்து படிப்பதை உறுதிசெய்வதாகவும் போ கூறினார்.
இரண்டு குழந்தைகளும் வீட்டில் இருப்பதன் காரணமாகச் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தாலும், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப தனது வேலை நேரத்தை மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
குறிப்பாகப் பள்ளி மூடல் ஒரு நாளுக்கு மேல் நீடித்தால், பள்ளி, அதிகாரபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து பின்பற்றுவதாக அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், விற்பனை நிர்வாகியான டெரிக் சிங், 41, “நேரில் வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் பள்ளி மூடப்பட்டால் அதைச் சமாளிப்பது சவாலாக இருக்கும்,” என்றார்
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“பள்ளி மூடப்பட்டால், எங்கள் எட்டு வயது மகனை யார் பார்த்துக்கொள்வது என்பதை நானும் என் மனைவியும் பேசி முடிவு செய்ய வேண்டும், அநேகமாக வேலையிலிருந்து சீக்கிரமாகப் புறப்பட வேண்டியிருக்கும்,” என்று அவர் கூறினார்.
வேலை நேரத்தை மாற்றுவதா, குடும்ப உறுப்பினரின் உதவியை நாடுவதா அல்லது வேறு குழந்தைப் பராமரிப்பு ஏற்பாடுகளைச் செய்வதா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன், தங்களின் வேலைப் பொறுப்புகளைக் கருத்தில் கொள்வதாக அந்தத் தம்பதியினர் தெரிவித்தனர்.
தேசியப் புகைமூட்ட நடவடிக்கை திட்டத்தின்படி, காற்றுத் தரக் குறியீடு, 200ஐத் தாண்டினால் பள்ளிகள், பாலர் பள்ளிகள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள் உடனடியாக மூடப்படும்.
இதற்கிடையில், செரியான், லுபோக் அந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் தற்காலிக மூடல், இரு மாவட்டங்களிலும் காற்றுத் தரக் குறியீடு 200க்குக் கீழ் குறையும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநிலக் கல்வித் துறையின் செப்டம்பர் 12 அறிக்கையை மேற்கோள்காட்டி பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூச்சிங், படவான், ஸ்ரீ அமான் உள்ளிட்ட 12 மாவட்டக் கல்வி அலுவலகங்களின் கீழ் உள்ள தொடக்க, மேல்நிலைப் பள்ளிகள் செப்டம்பர் 14 அன்று மீண்டும் வழக்கம்போல் இயங்கும்.