IND W vs PAK W
IND W vs PAK W- இந்திய மகளிர் அணி அபாரம்.. பாகிஸ்தானை 55 ரன்களில் சுருட்டி வீழ்த்தியது
துபாய்: மகளிர் ஆசியக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 56 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணி 8.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து எட்டிப் பிடித்தது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அந்த அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. விக்கெட் இழப்பின்றி 4.2 ஓவர்களில் 27 ரன்கள் எடுத்திருந்தபோது, ஷஃபாலி வர்மா வீசிய பந்தில் முனீபா அலி ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. நிதானமாக விளையாட தவறியதால், அடுத்த 28 ரன்களுக்குள் மீதமுள்ள 9 விக்கெட்டுகளையும் இழந்து, 18.1 ஓவர்களில் வெறும் 55 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆல்-அவுட் ஆனது. ஷாவால் சுல்பிகர் மற்றும் முனீபா அலி ஆகிய இருவரைத் தவிர வேறு எந்த பேட்டரும் இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். பாகிஸ்தானின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் ஸ்பின்னர்கள் அசத்தினர். சிறப்பாக பந்துவீசிய ஸ்ரீ சாருணி மற்றும் பிரேமா ராவத் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தீப்தி சர்மா முக்கிய தருணங்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியை எளிய ஸ்கோருக்குள் கட்டுப்படுத்த உதவினார்.
56 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு, பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா தனது பந்துவீச்சால் நெருக்கடி கொடுத்தார். ஷஃபாலி வர்மா, பிரத்திகா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்திய அவர், இந்தியாவின் டாப் ஆர்டரை சரித்தார்.
இதனால் இந்திய அணி 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. எனினும், இந்தியாவின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். கேப்டனாக தனது 150-வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய ஹர்மன்பிரீத் கவுர், 9-வது ஓவரின் நான்காவது பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியின் வெற்றியை கம்பீரமாக உறுதி செய்தார்.