36 வயதில் கூட வெறித்தனமாக இருக்கிறார் ஷமி.. கூடுதல் ஓவர் கேட்டதாக இசான் கிஷன் பாராட்டு
36 வயதில் கூட வெறித்தனமாக இருக்கிறார் ஷமி.. கூடுதல் ஓவர் கேட்டதாக இசான் கிஷன் பாராட்டு
சென்னை: துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் முகமது ஷமியின் அர்ப்பணிப்பு மற்றும் பந்துவீசும் ஆர்வம் குறித்து ஈஸ்ட் சோன் அணியின் கேப்டன் இஷான் கிஷன் பாராட்டியுள்ளார். இந்த சீசனில் ஷமியின் அணுகுமுறையும், விளையாட்டின் மீதான அவரது தீவிரமும் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு போட்டிகளின் போது, ஷமி அவராகவே முன்வந்து கூடுதல் ஓவர்களை வீசக் கேட்டது தனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்ததாக இஷான் கிஷன் கூறியுள்ளார். 99 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 903 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகும், ஷமியிடம் உள்ள இந்த உந்துதல் அவர் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவதற்கான தீவிர முயற்சியைக் காட்டுவதாகப் பாராட்டினார்.
பெங்களூருவில் சென்ட்ரல் சோன் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி, 13 ஆண்டுகளில் முதல்முறையாக ஈஸ்ட் சோன் அணி துலீப் டிராபி இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கிய பங்காற்றினார்.
இது குறித்து போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஷான் கிஷன், "அவர் இந்த விளையாட்டின் மிகச்சிறந்த ஜாம்பவான்களில் ஒருவர். பெங்கால் அணிக்காக விளையாடத் தொடங்கியது முதல் அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். விக்கெட்டுகளை வீழ்த்துவது, தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்துவது என இந்திய கிரிக்கெட் அணிக்காகவும் அவர் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்" என்று கூறினார்.
"வயது என்பது வெறும் எண் மட்டுமே என்று நான் நினைக்கிறேன். ஒருவர் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைக்கும்போது வயது ஒரு தடையாக இருக்காது. ஷமி பாயிடம் விளையாட்டின் மீதான அந்தத் தீவிரப் பசியை என்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறது" என்று தெரிவித்தார்.
"ஒரு கேப்டனாக அவரது முயற்சிகளைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விக்கெட்டுகளை வீழ்த்துவதற்காக ஷமி பாய் என்னிடம் வந்து கூடுதல் ஓவர்களைக் கேட்டார். பந்துவீச்சாளர்கள் தாமாக முன்வந்து விக்கெட்டுகளை வீழ்த்த முயலும்போது, அது கேப்டன்களுக்கு எப்போதும் கூடுதல் நம்பிக்கையைத் தரும். அத்துடன் அவர் இரண்டு பவுண்டரிகளையும் அடித்தார், எனவே தற்போதைய நிலையில் அவர் ஒரு ஆல்ரவுண்டர் என்றே நான் கருதுகிறேன்" என்று இஷான் கிஷன் குறிப்பிட்டார்.