செப்.9-ல் தவெக தலைமையில் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு
செப்.9-ல் தவெக தலைமையில் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு - திருமாவளவன்
கூட்டணியின் எதிர்காலத் திட்டங்கள், கூட்டணியின் பெயர் என அனைத்தையும் முதலமைச்சரும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் முடிவு செய்வார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
Published : September 5, 2026 at 4:24 PM IST
சென்னை: செப்.9-ல் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், தவெக தலைமையில் கூட்டணி அமைப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி.யை அமைச்சர்கள் என்.ஆனந்த், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இன்று (செப்.05) நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கட்சிகளுடனான இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.
இந்த சந்திப்பின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதைத் தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "செப்.09- ஆம் தேதி மாலை 04.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் தலைமையில் கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உள்பட கட்சித் தலைவர்கள் முக்கிய முடிவை எடுக்கவுள்ளனர். அந்த வகையில் தற்பொழுது அழைப்பு விடுக்க வருகை தந்துள்ளோம். ஏற்கனவே முதல் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில் கூட்டணியின் எதிர்கால திட்டங்கள், கூட்டணியின் பெயர் என அனைத்தையும் முதலமைச்சரும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் முடிவு செய்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துகிறார்களே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. அதற்காகத்தான் கூட்டணியை உருவாக்குகிறோம்; வரும் செப்.09- ஆம் தேதி மாலை பாருங்கள்" என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய திருமாவளவன் எம்.பி., "தவெக தலைமையில் தவெக அரசு அமைய ஆதரவு நல்கிய தலைவர்கள் பங்கேற்ற முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து இரண்டாவது கூட்டம் வருகிற செப்.9- ஆம் தேதியன்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் தவெக, காங்கிரஸ், ஐயுஎம்எல், மதிமுக உள்ளிட்டக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். தவெக தலைமையில் கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்; அந்த கூட்டத்தில் விசிக சார்பில் பங்கேற்க உள்ளோம்" என்று கூறினார்.
பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன் எம்.பி., "செப்.09- ஆம் தேதிக்கு பிறகு பேசிக் கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.