📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 05, 2026 06:02 PM

சிஎஸ்கே அணி 5 கோப்பை வென்றாலும், எது சிறந்த சீசன்? ரெய்னா கருத்து

சிஎஸ்கே அணி 5 கோப்பை வென்றாலும், எது சிறந்த சீசன்? ரெய்னா கருத்து

சிஎஸ்கே அணி 5 கோப்பை வென்றாலும், எது சிறந்த சீசன்? ரெய்னா கருத்து

ஐபிஎல் 2026 சீசனுக்குப் பிறகு, சிஎஸ்கே அணியின் வரலாற்றிலேயே மிகச்சிறந்த சீசன் எது என்பதை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தேர்வு செய்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக 11 சீசன்களில் விளையாடியுள்ள ரெய்னா, அந்த அணியுடன் இணைந்து பல கோப்பைகளை வென்றுள்ளார். இத்தனை ஆண்டுகளில் தான் விளையாடிய சீசன்களில், 2018 ஆம் ஆண்டுக்கான சிஎஸ்கே அணியே மிகச்சிறந்தது என்று சுரேஷ் ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, 2016 மற்றும் 2017 ஆகிய இரு ஆண்டுகள் தடைக்குப் பிறகு சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடருக்குள் கம்பேக் கொடுத்தது. அந்த கம்பேக் மிகச் சிறந்ததாக அமைந்ததுடன், 2018-ல் கோப்பையையும் வென்று அசத்தினர். இதுகுறித்து ஆகாஷ் சோப்ராவுடனான போட்காஸ்டில் பேசிய ரெய்னா, "நான் 2018 சீசனையே சிறந்ததாகத் தேர்ந்தெடுப்பேன்.

நாங்கள் இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருந்தோம், ஆனால் 2018-ல் அந்த அணியில் ஒரு புதிய ஒற்றுமையும் மனநிலையும் இருந்தது. எங்களில் பலர் தந்தையாகியிருந்தோம், எங்கள் மனைவிகளும் எங்களுடன் இருந்தனர். ஒரு வீரராக, தந்தையாக, கணவனாக அந்த சீசனை நான் மிகவும் ரசித்து விளையாடினேன்.

அந்த ஆண்டு நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். வாட்சன், டூ பிளெசிஸ், ராயுடு, நான், தோனி என எங்களின் டாப் 5 பேட்டர்கள் அனைவரும் தலா 400-500 ரன்களை குவித்தோம். எங்களின் அணுகுமுறை பயமற்றதாக இருந்தது" என்று கூறினார். அந்த சீசனில் லீக் சுற்றுகளின் முடிவில் 14 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

முதலாவது குவாலிபையர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்திய சிஎஸ்கே, பின்னர் இறுதிப் போட்டியிலும் அதே அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இது ஒரு முழுமையான கூட்டு முயற்சியாகும். அந்த சீசனில் சிஎஸ்கே தரப்பில் அம்பதி ராயுடு அதிகபட்சமாக 602 ரன்களை எடுத்தார். அவரைத் தொடர்ந்து ஷேன் வாட்சன் 555 ரன்கள், தோனி 455 ரன்கள் மற்றும் சுரேஷ் ரெய்னா 445 ரன்கள் குவித்தனர்.

அதே உரையாடலில், சுரேஷ் ரெய்னா தான் விளையாடியதிலேயே சிறந்த ஐபிஎல் சீசன் எது என்றும் பகிர்ந்து கொண்டார். ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டின் முதல் அனுபவம் என்பதால், 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடக்க சீசனையே அவர் சிறந்த சீசனாக தேர்வு செய்தார். மேலும், அந்த சீசனில் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கெப்ளர் வெசெல்ஸின் மனநிலைதான், இத்தனை ஆண்டுகளாக அணியின் பயமற்ற ஆட்டத்திற்கு அடித்தளமாக அமைந்தது என்றும் ரெய்னா கூறினார்.