📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 16, 2026 04:03 PM

சிங்கப்பூர் புகைமூட்டம்: வணிக வளாகங்கள் தானியங்கி கதவுகளை மூடின

சிங்கப்பூர் புகைமூட்டம்: வணிக வளாகங்கள் தானியங்கி கதவுகளை மூடின

வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 16), சிங்கப்பூர் தொடர்ந்து 12வது நாளாக ஆரோக்கியமற்ற காற்றை எதிர்கொண்ட நிலையில், முக்கிய சில்லறை விற்பனைக் கடைகளின் உரிமையாளர்கள், தங்கள் வாடிக்கையாளர்கள், வாடகைதாரர்கள், ஊழியர்களுக்கான புகைமூட்ட பாதிப்பைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.

லெண்ட்லீஸ், ஃபார் ஈஸ்ட் ஆர்கனைசேஷன், கேப்பிட்டலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் ஆகியவை தங்களின் குளிரூட்டி, இயந்திர காற்றோட்ட அமைப்புகளுக்கான காற்று வடிகட்டிகளைச் சுத்தம் செய்வதையும் கண்காணிப்பதையும் தீவிரப்படுத்தியுள்ளன.

உள்ளரங்குகளில் உள்ள மக்களைப் பாதுகாக்க, அவர்கள் தானியக்க வணிக வளாக நுழைவாயில்களை மூடி வைத்துள்ளனர். நீண்ட நேரம் வெளிப்புறச் சூழலை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் என்95 முகக்கவசங்களை விநியோகித்து வருகின்றனர்.

அக்டோபர் 16ஆம் தேதி நண்பகலில், தீவு முழுவதும் நிலவிய ஒரு மணிநேர பிஎம்2.5 அளவீடு 150க்கு மேல் உள்ள ‘உயர்’ வரம்பை எட்டியது. அதே நேரத்தில் சிங்கப்பூரின் மேற்கு, மத்திய, கிழக்குப் பகுதிகளில் 24 மணி நேர காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (பிஎஸ்ஐ) 200க்கு மேல் தாண்டி ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலையில் இருந்தது.

கேப்பிட்டலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் பேச்சாளர் கூறுகையில், அயோன் ஆர்ச்சர்ட், பிளாசா சிங்கப்பூரா, தெம்பனிஸ் மால், ஜங்ஷன் 8, ஃபூனான், காலாங் வேவ் வால் உள்ளிட்ட தங்களது வணிக வளாகங்களில், முடிந்த இடங்களில் எல்லாம் சன்னல்கள், தானியங்கி நுழைவுக் கதவுகளை மூடுவதன் மூலமும், வாடிக்கையாளர்களை மாற்று நுழைவாயில்களுக்கு வழிநடத்துவதன் மூலமும், நிர்வாகம் வெளிப்புறக் காற்றோட்டத்தைக் குறைக்கக்கூடும் என்றார்.

காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை அடையும்போது, வணிக வளாகங்களில் உள்ள வெளிப்புற வசதிகளும் மூடப்படலாம் என்றும் அந்தப் பேச்சாளர் மேலும் கூறினார்.

ஃபார் ஈஸ்ட் ஆர்கனைசேஷன் வணிகக் குழுமத்தின் செயல்பாடுகள், சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குநரான டெபரா டான், வெளிப்புற நுழைவாயில்களைக் கொண்ட வணிக வளாகக் குத்தகைதாரர்கள், தங்கள் நுழைவு வாயில்களை மூடி வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஃபார் ஈஸ்ட் ஆர்கனைசேஷன் கீழ் உள்ள வணிக வளாகங்களில் ஆர்ச்சர்ட் சென்ட்ரல், கிளார்க் கீ, சென்ட்ரல், ஸ்குவேர் 2, ஒன் ஹாலந்து வில்லேஜ் ஆகியவை அடங்கும்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

லெண்ட்லீஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சில்லறை வணிக வளாகங்களில் பார்க்வே பரேட், 313 சமர்செட், ஜெம், பிஎல்க்யூ மால் ஆகியவை அடங்கும்.

24 மணி நேர பிஎஸ்ஐ அளவீடு 200ஐத் தாண்டும்போது, ​​ஜெம் போன்ற லெண்ட்லீஸ் வணிக வளாகங்களில் உள்ள வெளிப்புற விளையாட்டுப் பகுதிகள் தற்காலிகமாக மூடப்படலாம் என்று லெண்ட்லீஸ் நிறுவனத்தின் சில்லறை விற்பனை, பணியிட மேலாண்மைத் தலைவர் ஜென்னி கூ கூறினார்.