ஃபர்ஸ்ட் ரிசோர்சஸ்: புகைமூட்டம், காட்டுத்தீ தொடர்பில்லை
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்டுள்ள செம்பனை எண்ணெய்த் தயாரிப்பு நிறுவனமான ஃபர்ஸ்ட் ரிசோர்சஸ், புகைமூட்டத்தை விளைவிக்கும் காட்டுத்தீக்கு எல் நினோ பருவநிலை நிகழ்வுதான் காரணம் என்றும் காட்டுத்தீ கொழுந்துவிட்டெரியும் இடங்களில் தாங்கள் செயல்படவில்லை என்றும் கூறியுள்ளது.
தற்போது தொடரும் புகைமூட்டப் பிரச்சினைக்கும் தங்களுக்கும் இருக்கக்கூடிய தொடர்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு அந்நிறுவனம் பதிலளித்தது.
ஃபர்ஸ்ட் ரிசோர்சஸ், ஃப்ர்ஸ்ட் போர்னியோ பிளான்டேஷன்ஸ், பூமிதாமா அக்ரி ஆகிய நிறுவனங்களின் பொறுப்பில் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்ட தோட்ட நிலங்கள், புகைமூட்டம் ஏற்படக் காரணமாக இருக்கின்றன என்று அக்டோபர் மாதம் 5ஆம் தேதி கிரீன்பீஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் அடையாளம் காணப்பட்டிருந்தது. ‘பிளான்டேஷன் கன்செஷன்’ என்றழைக்கப்படும் அந்த நிலங்களை மேம்படுத்தவோ பயன்படுத்தவோ நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிலப்பகுதிகள் செம்பனை எண்ணெய்த் தயாரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.
பங்கு விலைச் சரிவு
சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) பரிவர்த்தனையைத் தொடங்கியபோது செம்பனை எண்ணெய்ப் பங்கு விலை சரிந்தது. வெள்ளிக்கிழமை காலை 9.20 மணி நிலவரப்படி ஃபர்ஸ்ட் ரிசோர்சசின் பங்கு விலை 9.1 விழுக்காடு வரை சரிந்து 3.71 வெள்ளியாகப் பதிவானது. பிறகு விலை 3.89 வெள்ளியாகக் கூடியது.
சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் இடம்பெறும் பூமிதாமா அக்ரி நிறுவனத்தின் பங்கு விலையும் ஒரு கட்டத்தில் 7.5 விழுக்காடு சரிந்து 1.73 வெள்ளியாகப் பதிவானது. பிறகு அது சற்று மீண்டு 1.78 வெள்ளியாகப் பதிவானது.
வெள்ளிக்கிழமை தங்கள் பங்குகளை வாங்கி விற்பதை நிறுத்துமாறு பூமிதாமா அக்ரி கோரிக்கை விடுத்திருந்தது.
ஃபர்ஸ்ட் ரிசோர்சஸ் விளக்கம்
புகைமூட்டம் மோசமடைந்துவரும் நிலையில் அப்பிரச்சினை அதிகம் விமர்சிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், தீயினால் ஏற்படக்கூடிய அபாயங்களை ஆக்ககரமான முறையில் கையாள்வதற்குத்தான் தாங்கள் முன்னுரிமை அளிப்பதாக ஃப்ர்ஸ்ட் ரிசோர்சஸ் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 15) கூறியது. தீ மூள்வதைத் தவிர்க்க வலுவான நடவடிக்கைகள், கண்காணிப்பு, தீயணைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தங்களின் செயல்பாடுகளில் உள்ளடக்கிவருவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
எல் நினோ நிகழ்வால் இவ்வாண்டு அதிக காலம் நீடிக்கும் வறட்சியால் மேற்குக் கலிமந்தானில் தீமூளும் அபாயம் அண்மைய மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதாக ஃபர்ஸ்ட் ரிசோர்சஸ் குறிப்பிட்டது. கடந்த சில வாரங்களாகத் தீ எரியும் பகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அது சொன்னது.