சிங்கப்பூர் மாணவர்களின் ஏஐ பயன்பாடு: பிசா ஆய்வு
சிங்கப்பூர் மாணவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் வாரத்திற்கு ஒருமுறையாவது தங்களது கற்றலுக்குச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலிகளைப் பயன்படுத்துவதாக பிசா 2025 ஆய்வு தெரிவிக்கிறது.
இது, பொருளியல் ஒத்துழைப்பு, வளர்ச்சி அமைப்பின் (ஓஇசிடி) சராசரியான 46 விழுக்காட்டை விட அதிகம்.
இங்குள்ள மாணவர்களில் 41 முதல் 46 விழுக்காட்டினர் புதிய தலைப்புகளை ஆராயவும் தகவல்களைச் சுருக்கவும் கட்டுரைகளை எழுதவும் ஏஐ செயலிகளை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். நான்கு விழுக்காட்டினர் மட்டுமே ஏஐ செயலிகளை ஒருபோதும் பயன்படுத்துவதில்லை எனக் கூறியுள்ளனர்.
சிங்கப்பூரில் 157 பள்ளிகளைச் சேர்ந்த 6,551 மாணவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
வகுப்பறைகளில் அறிவியல் பாடத்தின்போது மின்னிலக்கச் சாதனங்களால் கவனம் சிதறுவதாக 29 விழுக்காட்டு மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் கூடுதலான பள்ளிகள் கைப்பேசிப் பயன்பாட்டுக்குத் தடை விதித்துள்ளன.
ஏஐ பயன்பாட்டிற்கும் அறிவியல் பாடத்தில் மாணவர்கள் காட்டும் திறனுக்கும் இடையே சிக்கலான தொடர்பு இருப்பதை பிசா அறிக்கை சுட்டிக்காட்டியது. மாணவர்கள் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் தாக்கம் அமைகின்றன.
பல்வேறு நாடுகளின் சராசரி நிலவரப்படி, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில்லை என்று கூறிய மாணவர்கள், அதனைப் பயன்படுத்துபவர்களைவிட அறிவியல் பாடத்தில் ஏறத்தாழ 20 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முன்னணியில் உள்ளனர்.
இது, அவர்கள் தங்கள் சக மாணவர்களைவிட ஒரு கல்வியாண்டு முன்னணியில் இருப்பதைப்போன்ற நிலைக்குச் சமம் என்று ஓஇசிடி தெரிவித்தது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
ஆய்வு முடிவுகள் குறித்தும் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்தும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கருத்துரைத்த ஓஇசிடி கல்வி, திறன் இயக்குநர் டாக்டர் ஆண்ட்ரியாஸ் ஷ்லைச்சர், ஏஐ வசதியானது என்றாலும் அது சிந்தனைத் திறனையும் கற்றல் முயற்சியையும் குறைப்பதாக எச்சரித்தார்.
ஆய்வு முடிவுகளை ஒப்புக்கொண்ட கல்வி அமைச்சு, சிங்கப்பூர் மாணவர்கள் குடும்ப உரையாடல்களிலும் உடற்பயிற்சி நடவடிக்கைகளிலும் குறைவாகவே ஈடுபடுவதைச் சுட்டியது. கற்றலில் பெற்றோர் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல், தீவிரமாகப் பங்கெடுக்க வேண்டும் என்றும் அமைச்சு கேட்டுக்கொண்டது.