📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 08, 2026 06:04 PM

ஏர் இந்தியாவில் செய்யப்பட்ட முதலீடு சிங்கப்பூர் ஏர்லைன்ஸைப் பாதிக்காது: ஜெஃப்ரி சியாவ்

ஏர் இந்தியாவில் செய்யப்பட்ட முதலீடு சிங்கப்பூர் ஏர்லைன்ஸைப் பாதிக்காது: ஜெஃப்ரி சியாவ்

ஏர் இந்தியா நிறுவனத்தில் செய்துள்ள முதலீடு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் (எஸ்ஐஏ) செயல்பாட்டுத் திறனையோ அல்லது சிங்கப்பூரர்களுக்குச் சேவை வழங்குவதையோ எந்த வகையிலும் பாதிக்காது என்று போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் போட்டித்தன்மையுடன் திகழ சவாலான சந்தைகளில் எஸ்ஐஏ தொடர்ந்து நிலைத்து நிற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“ஏர் இந்தியா நிறுவனத்தில் எஸ்ஐஏ 25.1 விழுக்காட்டுப் பங்குகளை வைத்திருந்தாலும், ஏர் இந்தியாவின் நிதி நிலைமை எஸ்ஐஏவுக்குப் பொருந்தாது.

“எனவே ஏர் இந்தியாவின் இழப்புகள் தானாகவே சிங்கப்பூர் விமான நிறுவனத்தின் பொறுப்புகளாக மாறிவிடாது.

“மேலும், இந்திய விமான நிறுவனம் கோரும் கூடுதல் மூலதன நிதிக் கோரிக்கையை ஏற்கவேண்டிய கட்டாயம் எஸ்ஐஏவுக்கு இல்லை,” என்றும் திரு சியாவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமான ஏர் இந்தியா, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இதுவரை கண்டிராத இழப்பைப் பதிவு செய்தது.

ஏர் இந்தியா மற்றும் அதன் மலிவுக்கட்டணச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை சேர்ந்து US$2.33 பில்லியன் இழப்பைப் பதிவு செய்தன. இது முந்தைய நிதி ஆண்டின் இழப்பைவிட இரு மடங்கிற்கும் அதிகம்.

அதன் பிறகு, ஆகஸ்ட் மாதம் தனது உரிமையாளர்களான டாடா சன்ஸ் மற்றும் எஸ்ஐஏ ஆகியவற்றிடமிருந்து கிட்டத்தட்ட US$1.5 பில்லியன் (S$1.9 பில்லியன்) புதிய ஈக்விட்டி நிதியை ஏர் இந்தியா கோரியதாகத் தகவல்கள் வெளியாயின.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளால் எஸ்ஐஏவுக்கு ஏற்படும் இழப்புகள், அத்தியாவசியப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் அதன் திறனைப் பாதிக்குமா என்று பாட்டாளிக் கட்சியின் அல்ஜுனிட் குழுத்தொகுதி உறுப்பினர் கென்னத் தியோங் கேள்வி எழுப்பி இருந்தார்.

அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் சியாவ் சில விளக்கங்களை வெளியிட்டார்.

தொடர் இழப்புகள், சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையச் சட்டம் (2009) பிரிவு 67பி-ஐ அமல்படுத்த வழிவகுக்குமா என்றும் திரு தியோங் வினவியிருந்தார்.

அத்தியாவசியப் போக்குவரத்துச் சேவை வழங்கும் எஸ்ஐஏவின் ஆற்றலைக் கடுமையாகப் பாதிக்கும் எந்தவொரு நிகழ்வு அல்லது சிக்கல் குறித்தும் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என அந்தச் சட்டப் பிரிவு வரையறுக்கிறது.

அந்தக் கேள்விக்குப் பதிலளித்த திரு சியாவ், பிரிவு 67பி என்பது ஒரு நிதி நிலவர அறிக்கை தொடர்பான விதிமுறை அல்ல என்றும் வெளிநாட்டு இணை நிறுவனத்தில் ஏற்படும் இழப்புகள் மட்டுமே அந்த விதியின்கீழ் வராது என்றும் தெளிவுபடுத்தினார்.