பெஞ்சுரு சாலையில் உள்ள சரக்குக் கிடங்கில் தீ விபத்து; 50 பேர் வெளியேற்றம்
பெஞ்சுரு சாலையில் உள்ள சரக்குக் கிடங்கு ஒன்றில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) பிற்பகல் நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மாலை 4 மணி நிலவரப்படி சம்பவ இடத்தில் தீயணைப்பாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பிற்பகல் 1.30 மணியளவில் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், பெஞ்சுரு சாலையில் உள்ள எண் 10 முகவரியில் அமைந்துள்ள சரக்குக் கிடங்கு ஒன்றில் தீ மூண்டதாகத் தங்களுக்கு நண்பகல் 12 மணியளவில் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தது.
அந்த முகவரியில் ‘யோஸ் புரோ மேனேஜ்மென்ட்’ தங்குவிடுதி நடத்தும் நிறுவனம், ‘ஹெங்யூ எஞ்சினியரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்’ கட்டுமான, பொறியியல் உபகரணங்கள் வாடகை நிறுவனம், ‘அபெக்ஸ் ஆஃப்ஷோர் அண்ட் எஞ்சினியரிங்’ பொறியியல், கட்டுமான நிறுவனம் ஆகியவை இயங்கி வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
சரக்குக் கிடங்கிற்குள் மட்டுமே பரவியுள்ள இந்தத் தீயைக் கட்டுப்படுத்த, நான்கு தண்ணீர் தெளிப்பான்கள் மற்றும் ஒரு தீயணைப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தித் தீயணைப்பாளர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்தைச் சென்றடைவதற்கு முன்பாகவே, அங்கிருந்த கிட்டத்தட்ட 50 பேர் பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் எதுவும் இல்லை.