திமுக-அதிமுக-பாஜக ஒரே கூட்டணியாக வந்தாலும் தவெகவை நெருங்க முடியாது
திமுக-அதிமுக-பாஜக ஒரே கூட்டணியாக வந்தாலும் தவெகவை நெருங்க முடியாது - நிர்மல் குமார்
முதலமைச்சரும், தோழமை கட்சிகளின் தலைவர்களும் இணைந்து தவெக கூட்டணி பெயர் தொடர்பாக முடிவு செய்வார்கள் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
Published : September 5, 2026 at 4:28 PM IST
மதுரை: வரும் தேர்தல்களில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் ஒரே கூட்டணியாக சேர்ந்து வந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தை நெருங்க முடியாது என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதில் எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை. லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடுகளில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. புகார் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில்தான் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர்தான் தெரிவிக்க வேண்டும்.
திமுகவும் அதிமுகவும் இணைந்து தவெக ஆட்சிக்கு எதிராக செயல்படுவது மக்களுக்கு தெரியும். எதிர்காலத்தில் அதிமுகவும், திமுகவும், பாஜகவுடன் இணைந்து ஒரே கூட்டணியாக போட்டியிடும் சூழலும் வரலாம். அவர்கள் யாருடன் கூட்டணி அமைத்தாலும் எந்தத் தேர்தலிலும் எங்களை நெருங்க முடியாது" என்று தெரிவித்தார்.
பிரதமர் வேட்பாளராக விஜய் மற்றும் ராகுல் காந்தியை முன்னிறுத்துவது தொடர்பான கேள்விக்கு, "தற்போது அதுகுறித்து பேச வேண்டிய அவசியமில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற திமுக எம்.பி. கனிமொழியின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, "ஏழை, எளிய மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது. ஊழல்வாதிகளுக்குத்தான் பாதுகாப்பு இல்லை; அவர்கள் மீது வழக்குகள் உள்ளது" என்றார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சரின் பதிலுரை நடைபெறும் நாளில் கேள்வி நேரம் இல்லை என்பது குறித்த கேள்விக்கு, "முதலமைச்சர் பல்வேறு விவகாரங்களுக்கும் சேர்த்து பதிலளிக்க வேண்டியிருக்கும். பதிலுரை முடிந்த பின்னர் உறுப்பினர்களுக்கு பதில் அளிக்க வேண்டியுள்ளது. அதன்பிறகு மானியக் கோரிக்கைகள் நடைபெறும். தொடர்ந்து கேள்வி நேரத்தையும் வைத்தால் இரவு 9 மணி வரை சட்டப்பேரவை நடைபெறும். இதனால் அன்றைய தினம் கேள்வி நேரம் இல்லை" என்று அவர் விளக்கம் அளித்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் விவகாரம் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் சமூக வலைதளப் பதிவு குறித்த கேள்விக்கு, "கோவில் விவகாரங்களில் அரசு தலையிடாது. பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகள் மட்டுமே வழங்கப்படும். முந்தைய அரசுகள் கோவில் நிர்வாகத்தில் செய்த தவறுகளை எங்கள் ஆட்சியில் செய்ய மாட்டோம்.
கோவில் அறங்காவலர் குழுக்களில் திமுகவினர் மற்றும் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதுபோன்ற தவறுகள் தற்போதைய ஆட்சியில் இருக்காது.
பி.டி.ஆர். குடும்ப அறக்கட்டளை தொடர்பாக, அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தின் நிர்வாகிகள் என்னை சந்தித்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக தங்களை எந்தப் பணியையும் செய்ய விடாமல் அறக்கட்டளையை முடக்கி வைத்திருப்பதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
சின்னச் சின்ன ஈகோ காரணமாக பி.டி.ஆர். குடும்ப அறக்கட்டளை செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சட்டபூர்வமாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யத் தயாராக இருக்கிறோம்" என்று அவர் பதில் அளித்தார்.
தவெக கூட்டணி குறித்து பேசிய அவர், "கூட்டணியின் பெயர் தொடர்பாக முதலமைச்சரும், தோழமை கட்சிகளின் தலைவர்களும் இணைந்து முடிவு செய்து அறிவிப்பார்கள்" என்றும் தெரிவித்தார்.