தமிழில் பெயர் பலகை வைக்கும் விவகாரம்
தமிழில் பெயர் பலகை வைக்கும் விவகாரம் - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
தமிழ்நாடு அரசின் உத்தரவை அமல்படுத்தத் தயாராக இருக்கின்றோம்; எனினும், அவகாசம் வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
Published : September 5, 2026 at 8:05 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை வரும் நவ.01- ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் உள்ள கடைகளிலும் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என கடந்த 2025- ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு உத்தரவுப் பிறப்பித்திருந்தது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உத்தரவில், பெயர் பலகைகளில், தமிழ் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ளலாம் என்றும், தவறினால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (செப்.05) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், "தமிழ்நாடு அரசின் உத்தரவை அமல்படுத்தத் தயாராக இருக்கின்றோம்; அதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
மனுதாரரின் வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி கே.சுரேந்தர், "நவம்பர் 01- ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடைகளின் பெயர் பலகைகளையும் தமிழில் மாற்ற வேண்டும்; தவறினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.