AUS vs ZIM: டிராவிஸ் ஹெட் அதிரடி சதம்.. ஜிம்பாப்வே போராட்டம் வீண்.. தொடரை வென்ற ஆஸ்திரேலியா
AUS vs ZIM: டிராவிஸ் ஹெட் அதிரடி சதம்.. ஜிம்பாப்வே போராட்டம் வீண்.. தொடரை வென்ற ஆஸ்திரேலியா
ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றி அசத்தியுள்ளது.
ஹராரேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 84 பந்துகளில் 112 ரன்கள் விளாசினார்.
ஜிம்பாப்வேக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இவருடன் தொடக்க ஜோடியாக களம் இறங்கிய கேப்டன் மிட்செல் மார்ஷ் அரைசதம் கடந்து அசத்தினார். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.
நடுவரிசையில் சிறப்பாக விளையாடிய கூப்பர் கான்னோலி 78 ரன்கள் எடுத்தார். இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய ஆலிவர் பீக் வெறும் 18 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.
அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் பலரும் நல்ல தொடக்கத்தைப் பெற்ற போதிலும், அவர்களால் அதை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. அணியில் ஒருவர் கூட அரைசதம் கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ரசா 45 ரன்கள் எடுத்தார். டாப் ஆர்டர் வரிசையில் நான்கு பேட்ஸ்மேன்கள் 30 ரன்களைக் கடந்த நிலையில் ஆட்டமிழந்தனர். இறுதியாக ஜிம்பாப்வே அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 272 ரன்களுக்கு சுருண்டது.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பில்லி ஸ்டான்லேக் போட்டிக்கு நடுவே காயம் காரணமாக விலகியதால், மிட்செல் மார்ஷ் சுழற்பந்து வீச்சை அதிகம் பயன்படுத்தினார். ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா இப்போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் தனது 200-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.
இந்த மைல்கல்லை எட்டும் இரண்டாவது ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.மேலும் ஜோஷ் ஹேசில்வுட், மேட் ரென்ஷா மற்றும் கூப்பர் கான்னோலி ஆகியோரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர். ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ளது.