விஜய் மக்களுக்கு நல்லது செய்வார் என்று ராகுல் முழுமையாக நம்புகிறார்
விஜய் மக்களுக்கு நல்லது செய்வார் என்று ராகுல் முழுமையாக நம்புகிறார் - மதுராந்தகத்தில் மாணிக்கம் தாகூர் பேச்சு
விஜய் மதசார்பற்ற ஜனநாயக கொள்கையில் தெளிவாக உள்ளார் என மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
Published : October 2, 2026 at 3:28 PM IST
செங்கல்பட்டு: விஜய் ஒரு முதலமைச்சராக தமிழக மக்களுக்கு நல்லது செய்வார் என்று ராகுல் காந்தி முழுமையாக நம்புவதாகவும், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலுக்கு விசில் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக் தாகூர் பேசியுள்ளார்.
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து நடைபெற்ற மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக் தாகூர் பேசினார்.
அப்போது அவர், "காங்கிரஸ் கட்சி திடீரென தவெகவுடன் சேர்ந்துவிட்டதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி எப்போதும் உடனடியாக எந்த முடிவையும் எடுக்காது. முறையாக ஆலோசித்து, அனைவரின் கருத்துகளையும் கேட்ட பிறகே முடிவெடுக்கும்.
2026 தேர்தல் தொடர்பாக ஜனவரி 17ஆம் தேதி டெல்லிக்கு காங்கிரஸ் தலைவர்கள் அழைக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது எங்களது கருத்துகளை தலைமையிடம் தெரிவித்தோம். மார்ச் 2ஆம் தேதி காங்கிரஸ் கட்சி திமுகவுடனான கூட்டணியைத் தொடர முடிவு செய்தது. அதன் பிறகு ஏற்பட்ட சூழலில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் முடிவு செய்தது.
மார்ச் 5ஆம் தேதி திமுகவிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சொல்லாமல் சென்றுவிட்டதாக கூறுவது தவறு. காங்கிரஸ் தலைவர் கார்கே, திமுகவின் டி.ஆர்.பாலுவிடம் காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளிக்கவிருப்பதைத் தெரிவித்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தவெக தலைவர் விஜய், விக்கிரவாண்டி மாநாட்டில் அறிவித்த ஆட்சியில் பங்கு, சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவை காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுடன் நெருக்கமானவை. சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டார்.
விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே, 2009-ஆம் ஆண்டில் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளார். அரசியல் தலைவராக உருவான பிறகும் அவரது கொள்கைகளுக்கும் ராகுல் காந்தியின் கொள்கைகளுக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.
கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜயிடம் முதலில் பேசிய அரசியல் தலைவர் ராகுல் காந்திதான். துயரத்திலிருந்து மீண்டு, தன்னை நம்பியுள்ள மக்களுக்காக நிற்க வேண்டும் என்று அவர் விஜயிடம் கூறினார். ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரத்திலும் விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.
விஜய் மதச்சார்பற்ற கொள்கையிலும் ஜனநாயகத்திலும் தெளிவாக உள்ளவர். அவர் ஒரு முதலமைச்சராக தமிழக மக்களுக்கு நல்லது செய்வார் என்று ராகுல் காந்தி முழுமையாக நம்புகிறார். மற்றவர்களின் கருத்துகளைக் கேட்டு முடிவெடுக்கும் ஜனநாயகவாதியாக விஜய் உள்ளார். எனவே, அவருக்கு ஆதரவாக மரகதம் குமரவேலுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்று பேசினார்.