📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 03, 2026 06:03 AM

எஸ்ஐஆர் பணியில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம்! அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு

எஸ்ஐஆர் பணியில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம்! அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு

புதுடில்லி: எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு பின், வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட தகுதியான வாக்காளர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க, சிறப்பு முகாம்களை நடத்தும்படி, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உட்பட, 20 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர்., பணி நடந்து முடிந்து இறுதி வாக்காளர் பட்டியலே வெளியிடப்பட்டு விட்டது. இதுவரை மொத்தம், 13 கோடி பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த எஸ்.ஐ.ஆர்., பணியில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டும் காங்., - திரிணமுல் காங்., - சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்' என, வலியுறுத்தி வருகின்றன.

இது தவிர, தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோருடன் கலந்து ஆலோசிக்காமல், ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதை தேர்தல் கமிஷன் மறுத்தது.

எஸ்.ஐ.ஆர்., நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், புதிய வாக்காளர் சேர்க்கைக்கான, 'படிவம் - 6'ல், பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டியின் முந்தைய வாக்காளர் பட்டியல் விபரங்களை குறிப்பிட தேவையில்லை என, தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்தது.

இந்த சூழலில், அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன், கடந்த 1ல், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், தேர்தல் கமிஷன் விரிவான ஆலோசனை நடத்தியது. கூட்டத்துக்கு பின், தேர்தல் கமிஷன் பிறப்பித்த உத்தரவு:

வாக்காளர் சேர்க்கை என்பது, ஒரு தொடர்ச்சியான நடைமுறை. எஸ்.ஐ.ஆர்., பணியின் போது விடுபட்டனர் என்பதற்காக மட்டுமே, தகுதியுள்ள எந்தவொரு குடிமகனுக்கும் ஓட்டளிக்கும் உரிமை மறுக்கப்படக் கூடாது. எனவே, எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பின், வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட தகுதியான வாக்காளர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

பி.எல்.ஓ., எனப்படும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் எஸ்.ஐ.ஆர்., பணிக்கு முந்தைய வாக்காளர் பட்டியலையும், தற்போதைய வாக்காளர் பட்டியலையும் சரியாக ஒப்பிட்டு பார்த்து, பெயர் விடுபட்ட வாக்காளர்களின் பட்டியலை ஓட்டுச்சாவடி வாரியாக தயாரிக்க வேண்டும். பட்டியலில் பெயர் விடுபட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, பி.எல்.ஓ., கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அவர்கள் தகுதியுள்ளவர்களாக இருக்கும் பட்சத்தில், உடனடியாக, படிவம் - 6 மூலம் அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

ஒவ்வொரு பி.எல்.ஓ.,வும், ஒரு வாரத்திற்கு குறைந்தது, 20 முதல் 25 வாக்காளர்களை நேரில் சந்தித்து சரிபார்க்க வேண்டும். இப்பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும். கள ஆய்வின் போது, 18 வயது பூர்த்தி அடைந்த புதிய மற்றும் இளம் வாக்காளர்களையும் கண்டறிந்து, படிவம் - 6 மூலம், அவர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

ஓட்டுச்சாவடி வாரியாக தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியல்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பூத் லெவல் ஏஜன்ட்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் வழங்கப்படும். பி.எல்.ஓ.,க்கள் மேற்கொள்ளும் கள ஆய்வு அறிக்கையுடன், படிவம் -- 6 விண்ணப்பங்களும் வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அவற்றின் மீது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் - 1950, வாக்காளர் பதிவு விதிகள் - 1960 அடிப்படையில், அவர்கள் இறுதி முடிவு எடுப்பர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்ய, ஓட்டுச்சாவடி அளவில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள், தொழிலாளர் குடியிருப்புகளில் உள்ளவர்கள், வீடற்றவர்கள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இந்த முகாம்கள் பெரிதும் உதவும்.

எஸ்.ஐ.ஆர்., பணியின் போது தயாரிக்கப்பட்ட, 'முகவரியில் இல்லாதவர், இடம் மாறியவர், இறந்தவர், இரட்டை பதிவு' என, வகைப்படுத்தப்பட்ட வாக்காளர்களின் பட்டியல்கள், ஏற்கனவே உள்ளாட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்த பட்டியல்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடமும் வழங்கப்பட்டு உள்ளதுடன், சம்பந்தப்பட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

சிறப்பு முகாம் முடிந்ததும், ஒவ்வொரு ஓட்டுச்சாவடி வாரியாக தயாரிக்கப்பட்ட பட்டியல்களை அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் மீண்டும் வழங்க வேண்டும். விடுபட்ட தகுதியான வாக்காளர்களை அவர்கள் அடையாளம் கண்டு, வாக்காளர் பட்டியலில் சேர்க்க உதவலாம். இந்த சிறப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.