மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 5 மணி நேரம் ரோடு ஷோ
மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 5 மணி நேரம் ரோடு ஷோ - தேநீர் பருகல் முதல் ஆரத்தி வரை நிகழ்ந்த சுவாரஸ்யங்கள்
மதுராந்தகம் ஊருக்குள் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கிருந்த ஒரு தேநீர் கடையில் அமர்ந்து முதியவர்களுடன் கலந்துரையாடியவாறு தேநீர் அருந்தினார்.
Published : October 2, 2026 at 11:08 PM IST
செங்கல்பட்டு: மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட இடங்களில் சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக முதலமைச்சர் விஜய், ரோடு ஷோ சென்று தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவுத் திரட்டினார். வழிநெடுகிலும் தவெக நிர்வாகிகள், பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நாட்டில் தாராபுரம் (தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் அக்.06- ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை வரும் அக்.09- ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மறுநாள் (அக்.04) மாலை 05.00 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தவெக நிர்வாகிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
முதியவர்களுடன் அமர்ந்து தேநீர் அருந்திய முதவ்வர் விஜய்
பின்னர், அங்கிருந்து விவசாய நிலங்களுக்கு பார்வையிட சென்ற முதலமைச்சர், டிராக்டரை இயக்கி விவசாயிகளின் கவனத்தை ஈர்த்தார். மேலும் விவசாயியுடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.
மாற்றுத்திறனாளிகளை நலம் விசாரித்த முதல்வர்
எல்.எண்டத்தூர் பகுதியைத் தொடர்ந்து கிளியாநகர் பகுதிக்கு ரோடு ஷோ சென்றபோது, சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று முதலமைச்சர் விஜய்க்கு வரவேற்பு அளித்தனர். அப்போது சாலையோரத்தில் வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளை முதலமைச்சர் விஜய் கவனித்தார். கூட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் தனியாக அமர்ந்திருந்த அவர்களைப் பார்த்ததும், பிரச்சார வேனை நிறுத்தச் செய்து கீழே இறங்கிய அவர், அவர்களை நேரடியாகச் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
மாற்றுத்திறனாளிகளான ருக்மணி, செல்வக்குமார் உள்ளிட்டோருடன் சிறிது நேரம் உரையாடிய விஜய், அவர்களது குடும்ப நிலை மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்
முதலமைச்சர் விஜய், ரோடு ஷோ சென்ற இடங்களில் அவரது வாகனத்தை நிறுத்தி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அந்த பெண்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடிய முதலமைச்சர், மீண்டும் ரோடு ஷோவைத் தொடர்ந்தார். வழிநெடுகிலும் பொதுமக்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
தேநீர் நன்றாக இருப்பதாக பாராட்டு
தேநீர் கடை உரிமையாளர் ஜோதிலிங்கம் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "கடந்த 25 ஆண்டுகளாக இந்த பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறேன். முதலமைச்சர் விஜய் ஐயா எங்கள் கடைக்கு வருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. பிரச்சார வாகனத்தை நிறுத்திவிட்டு திடீரென கடைக்குள் வந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது.
பின்னர், அவரை வரவேற்று தேநீர் சாப்பிடுகிறீர்களா அல்லது காபி சாப்பிடுகிறீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் தேநீர் போடுங்கள் என்று கூறினார். அதன்படி நான் தேநீர் தயாரித்துக் கொடுத்தேன். தேநீரை அருந்திய அவர், தேநீர் மிகவும் நன்றாக இருப்பதாக பாராட்டினார். அது மட்டுமின்றி அங்கிருந்த பொதுமக்களுடன் மிகவும் எளிமையாக அமர்ந்து பேசினார். முதியவர்களுடனும் கலந்துரையாடினார். எங்கள் கடைக்கு விஜய் ஐயா வந்து தேநீர் அருந்துவார் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. எதிர்பாராமல் நடந்த இந்த சந்திப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது" என்றார்.
நலம் விசாரித்த முதல்வர் விஜய்
மாற்றுத்திறனாளி செல்வக்குமார் கூறுகையில், "முதலமைச்சர் விஜய் ஐயா வருகிறார் என்று கேள்விப்பட்டு அவரைப் பார்ப்பதற்காக நாங்கள் காத்திருந்தோம். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்டத்துக்குள் சென்று அவரைப் பார்க்க முடியவில்லை. அதனால் சாலையோரத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் அமர்ந்திருந்தோம்.
அப்போது முதலமைச்சர் விஜய் ஐயா அந்த வழியாக வந்துக் கொண்டிருந்தார். எங்களை பார்த்தவுடனேயே அவர் வாகனத்தை நிறுத்தச் செய்தார். பின்னர் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி நேராக எங்களிடம் வந்து பேசினார். எங்களைப் பார்த்து எப்படி இருக்கிறீர்கள்? என்று அன்பாக நலம் விசாரித்தார்.
நாங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி எங்களிடம் வந்து பேசியது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கூட்டத்தில் நாங்கள் சென்று அவரை சந்திக்க முடியாத நிலையில் அவரே எங்களைத் தேடி வந்து பேசியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது" என்றார்.