உதவி தேவைப்படும் சிறார்களுக்கு நன்கொடை திரட்டிய காற்பந்தாட்டம்
‘சிஎச்ஐஜே’ பிள்ளைகளுக்கான அடைக்கல அமைப்பைச் (CHIJ Sanctuary for Children) சேர்ந்த பிள்ளைகளுக்காக நிதி திரட்டப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் காற்பந்து விளையாட்டாளர்களும் இணைந்து நிதி திரட்டுக்காகச் செப்டம்பர் 5ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட காற்பந்துப் போட்டியில் கலந்துகொண்டனர்.
அப்போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
‘சிஎச்ஐஜே’ செயின்ட் நிக்கலஸ் பெண்கள் பள்ளியில் முதன்முறையாக ‘நன்மைக்கான இலக்குகள் 2026’ (Goals for Good 2026) எனும் நிதித் திரட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கல்வி ஆதரவு, மாணவர் பராமரிப்பு, சமூகச் சேவைகள் ஆகியவை மூலம் உதவி தேவைப்படும் பிள்ளைகளுக்கும் குடும்பங்களுக்கும் ஆதரவளிப்பதே இந்த ஏற்பாட்டின் நோக்கம்.
அமைச்சர்கள், அரசாங்கத் தலைவர்கள் சிலருடன் முன்னாள் காற்பதுப் பிரபலங்களும் இணைந்தனர்.
போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங், போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், வெளியுறவு, தேசிய வளரச்சி துணை அமைச்சர் ஆல்வின் டான் உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்கள் திடலில் விளையாடி மகிழ்ந்தனர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இவர்களோடு முன்னாள் சிங்கப்பூர் தேசியக் காற்பந்து விளையாட்டாளர்களான அலெக்சாண்டர் டூரிச், இந்திரா சாஹ்தான், பைஹக்கி கைசான், எஸ். சுப்ரமணி, டேனியல் பென்னட், ஜெர்மி சியாங், வலேரி சூ ஆகியோரும் விளையாடினர்.
இந்தக் கண்காட்சிப் போட்டியைத் தவிர குடும்பங்களுக்கான இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுச் சாவடிகளும் இடம்பெற்றன.
அத்துடன், 20 தொடக்கப்பள்ளி அணிகள் பங்கேற்ற 5 பேர் கொண்ட காற்பந்துப் போட்டியும் இடம்பெற்றது.
ஜிங் ஷான் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 11 வயதான முஹம்மது இம்ரான் யூசோப் போன்ற பங்கேற்பாளர்களுக்கு மற்ற பள்ளிகளுடன் போட்டியிடுவது இந்நிகழ்ச்சியின் மிகச் சிறந்த பகுதியாக அமைந்தது.
செவ்வாய், வியாழக்கிழமைகளில் துணைப்பாட வகுப்புகளுக்காகவும் காற்பந்து விளையாடுவதற்காகவும் இப்பள்ளிக்கு அடிக்கடி வரும் முஹம்மது, வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதாகவும், தொண்டர்கள் நடத்தும் நடவடிக்கைகளைத் தான் மிகவும் விரும்புவதாகவும் பகிர்ந்து கொண்டார்.
அதேபோல, மேஃப்ளவர் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 11 வயதான மகிமா மதியழகன், ‘சிஎச்ஐஜே’ செயின்ட் நிக்கலஸ் பெண்கள் பள்ளியில் நண்பர்களுடன் விளையாடுவதும், நூலகத்தில் புத்தகங்கள் வாசிப்பதும் தனக்குப் பிடித்த நடவடிக்கைகள் எனக் கூறினார்.
அவை தனது நேரத்தை மிகவும் மகிழ்ச்சியாக்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
காற்பந்து வழியாக மக்கள் இணைவதோடு பிள்ளைகளின் தன்னம்பிக்கையும் வளர்வதாக ‘சிஎச்ஐஜே’ செயின்ட் நிக்கலஸ் பெண்கள் பள்ளியின் முதல்வர் வினிஃப்ரெட் லோ சுட்டினார்.