போராட்டம், சமூக நீதி, வாழ்வாதாரம்... தேசத்தை கவனிக்கவைத்த மூன்று வைரல் பெண்கள்!
போராட்டம், சமூக நீதி, வாழ்வாதாரம்... தேசத்தை கவனிக்கவைத்த மூன்று வைரல் பெண்கள்!
சாதிப் பாகுபாடு காரணமாக தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, பட்டியலின மக்கள் கோயிலின் முன்பாக போராடினர்.
சென்ற வாரம், மூன்று பெண்களின் வீடியோக்கள் வைரல். ஒருவர், தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரி இளைஞர்கள் டெல்லியில் நடத்தும் போராட்டத்தின் முகமாகி மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்திய இளம்பெண் நேஹா போரா. இரண்டாமவர், `பட்டியலின மக்கள் நுழையக்கூடாது’ எனப் பூட்டப்பட்ட கோயிலின் கதவுகளை, சாதிவெறியைத் தகர்த்து திறந்த கள்ளக்குறிச்சி எஸ்.பி ஷஹனாஸ் ஐ.பி.எஸ். மூன்றாவது பெண், `ஹோம்கார்ட்’ பணித் தேர்வுக்காக 1,600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெறும் கால்களுடன் ஓடி ஜெயித்த, ஜார்காண்டை சேர்ந்த 30 வயது கைம்பெண் கவிதா குமாரி. இந்தச் சம்பவங்களைப் பின்னணியுடன் விரிவாகப் பார்ப்போம்.
உரிமைகளை மீட்க... வீதியில் போராடும் நேஹா போரா!
“உரிமைக்காகப் போராடுபவர்களை அடக்கிவிட முடியாது” - டெல்லி காவல்துறையின் தடுப்புக் காவலில் தான் வைக்கப்பட்டது குறித்து 29 வயதான நேஹா போரா பகிர்ந்த நெருப்பு வார்த்தைகள் இவை.
அரசியல் சாரா மாணவர்களையும் பொதுமக்களையும் ஜனநாயக உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடவைக்கும் இளம் தலைமுறைத் தலைவராக உருவெடுத்துள்ளவர்தான், நேஹா போரா. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான டெல்லி போராட்டங்களைத் தற்போது முன்னின்று நடத்திவரும் இவர், தேர்தல் ஆணையத்தின் ‘SIR’ (சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்) நடைமுறையின் மூலம் வாக்காளர்கள் நீக்கப்படுவதாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி டெல்லி, ஜந்தர் மந்தரில் பிரம்மாண்டப் பேரணிகளை நடத்தியிருக்கிறார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் காதிமா நகரைச் சேர்ந்தவர் நேஹா போரா. டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை முடித்தவர், டெல்லியிலுள்ள பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார். தற்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நாடகம் மற்றும் அரங்கியல் பிரிவில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுவரும் நேஹா, தனது கலை மற்றும் நாடகக் செயல்பாடுகள் மூலம் மாணவர் இயக்கத்துக்குள் நுழைந்தார். குறிப்பாக, இடதுசாரி மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து, அந்த அமைப்பின் பல்வேறு பொறுப்புகளை வகித்து, அதன் தேசியத் தலைவராகவும் தற்போது உயர்ந்திருக்கிறார்.
போராட்டங்கள் ஒன்றும் நேஹாவுக்குப் புதிதல்ல. இதற்கு முன்பு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சமூகச் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்குடன் இணைந்து, 23 நாள்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். `காக்ரோச் ஜனதா கட்சி’ நடத்திய மாணவர் போராட்டங்களிலும் இவர் பங்கெடுத்தார்.
தற்போது நடந்துவரும் போராட்டங்களில், நேஹா காவல்துறையின் தடுப்புகளை மீறிச் சென்றதாகக்கூறி அடுத்தடுத்து டெல்லி காவல்துறையால் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டார். காவல்துறையின் அடையாளம் இல்லாத தனியார் வாகனத்தில் பெண் காவலர்கள் இன்றி அவரை கைது செய்து அழைத்துச் சென்றதாக, அகில இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தியது. இவர் கைது செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், பிரசாந்த் பூஷன் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான யோகேந்திர யாதவ் போன்ற முன்னணி ஆளுமைகள் நேஹா போராவின் போராட்டக் களத்துக்கு நேரில் வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தத்தில், அரசின் அதிகாரத்துக்கு அடிபணிய மறுத்து, களத்தில் கம்பீரமாய் சுழன்றடித்து வருகிறது, இந்தப் பெண் புயல்!
சட்டத்தின் வழியில் சாதியச் சுவரை தகர்த்த... ஷஹனாஸ் ஐ.பி.எஸ்!
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற ஜனநாயகத் தத்துவத்தை வெற்று உரைகளாக நிறுத்தாமல், களத்தில் இறங்கிச் செயலாக மாற்றிக்காட்டியிருக்கிறார் கள்ளக்குறிச்சி எஸ்.பி ஷஹனாஸ் ஐ.பி.எஸ். சாதியப் பாகுபாடுகளுக்கு சாட்டையடியாகவும், சமத்துவத்தின் குரலாகவும் நிற்கும் இந்த நேர்மையான அதிகாரியின் சமீபத்திய களப் பணி, அதிரடி.
ஷஹனாஸ் ஐ.பி.எஸ், தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த, 2021-ம் ஆண்டு பேட்ச் இந்தியக் காவல் பணி அதிகாரி. துணிச்சலான கள நடவடிக்கைகள் மற்றும் சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதில் உறுதியான நிலைப்பாடு கொண்ட இளம் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியாக அறியப்படுபவர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே குரால் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகலியுக சீனிவாச பெருமாள் கோயில். புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, குரால் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் அந்தக் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய முயன்றபோது, அங்குள்ள ஆதிக்க சாதியினர் அவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்து கதவைப் பூட்டினர். இந்த அநீதி, 50 ஆண்டுகளாக அங்கு தொடர்ந்து வருவது அவலம்.
வறுமையின் முட்களை வெறும் கால்களால் மிதித்து வென்ற கவிதா குமாரி!
தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு அரசு வேலையைப் பெற, தன் கால்களை மட்டுமே நம்பி மைதானத்தில் ஓடிய ஒரு எளிய பெண்ணின் வீடியோ, பலரையும் நெகிழச் செய்துள்ளது.
ஜார்காண்ட் மாநிலம், ராம்கர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா குமாரி. 30 வயதான இவர் கணவரை இழந்து தன் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். அரசு வேலைக்காக, மாநில ஹோம்கார்ட் (Home Guard) பணித் தேர்வில் கலந்துகொண்டார். முறையான விளையாட்டு ஆடைகளோ, காலணிகளோ தன்னிடம் இல்லை என்றாலும், அந்த வறுமை தன் இலக்கிற்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். பணிக்கான உடற்தகுதித் தேர்வில் வெறும் காலுடன், புடவையைச் சற்று ஏற்றி செருகியபடி ஓடி, வெற்றிக் கோட்டைத் தொட்ட வீடியோ, தேசம் முழுக்க வைரல்.
1,600 மீட்டர் தொலைவைக் கடக்க வேண்டிய அந்த ஓட்டப்பந்தயத்தில், ஏழு நிமிடங்களுக்குள் வெற்றிக் கோட்டை தொட்டு, `மிகச் சிறப்பு’ (Excellent) என்ற தகுதியையும் பெற்றிருக்கிறார் கவிதா. இவரின் வேகத்தையும், மன உறுதியையும் கண்டு தேர்வாணைய அதிகாரிகளும் காவல்துறையினரும் வியந்து பாராட்டி கைதட்டியுள்ளனர்.
கவிதாவின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பல தொண்டு நிறுவனங்களும் உள்ளூர் நிர்வாகமும் அவருக்கு நிதி உதவி வழங்க முன்வந்துள்ளன.
நாட்டுக்காக நிற்கும் நேஹா போரா, சமூக நீதியை நிலைநாட்டிய ஷஹனாஸ் ஐ.பி.எஸ், வீட்டுக்காக வெறும் கால்களில் சாதனை படைத்த கவிதா... சல்யூட் பெண்களே!