நிறுவன வருமான வரி தாக்கல்: புதிய மின்னிலக்க வளங்கள்
நிறுவன வருமான வரிப் படிவங்கள் சமர்ப்பிக்கப்படும் நடைமுறையைப் புதிய மின்னிலக்க வளங்கள் எளிமையாக்கவிருக்கின்றன.
புதிதாகப் பதிவு செய்யப்பட்ட 37,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உட்பட 323,000க்கும் அதிகமான நிறுவனங்கள் அவற்றின் மூலம் பலனடையவுள்ளன. சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் திங்கட்கிழமை (அக்டோபர் 19) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
2026 மதிப்பீட்டு ஆண்டிற்காக நிறுவன வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்யும்போது, விரிவாக்கப்பட்ட, மேம்படுத்தப்பட்ட மின்னிலக்க வளங்களை அவை பயன்படுத்திக்கொள்ளலாம்.
வரிப் படிவங்களைத் தாக்கல் செய்யும் நிர்வாகச் சிரமங்களைக் குறைப்பதற்குத் தெளிவான, தடையற்ற வரி நடைமுறைகள் முக்கியம் என்பதை ஆணையம் அறிந்துள்ளது. அத்தகைய நடைமுறைகள் இருப்பது, நிறுவனங்கள் தொழிலை நடத்துவதிலும் வளர்ப்பதிலும் அதிக கவனம் செலுத்த வழிவிடும் என்று அது கருதுகிறது.
வரித் தாக்கலை எளிமைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தற்போதைய முயற்சிகளுக்கு வலுவான வரவேற்புக் கிடைத்துள்ளது. மதிப்பீட்டு ஆண்டு 2025ல், தகுதியுள்ளவற்றில் 10ல் 8 நிறுவனங்கள், ‘ஃபார்ம் சி-எஸ் (லைட்)’ என்ற எளிமைப்படுத்தப்பட்ட படிவத்தைப் பயன்படுத்தின. நேரடியான வரி விவரங்களுடன் $200,000 அல்லது அதற்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட நிறுவனங்களுக்கு, தகவல்கள் நிரப்புவதை மூன்று பக்கங்களிலிருந்து ஆறு அத்தியாவசியக் கட்டங்களாக இந்தப் படிவம் குறைக்கிறது.
இந்த ஆண்டு, நவம்பர் 30ஆம் தேதி கெடுவுக்கு முன்பாகவே, நிறுவனங்கள் வரிப் படிவங்களைத் துல்லியமாகவும் சரியான நேரத்திலும் எளிதாகத் தாக்கல் செய்வதற்காகப் புதிய, மேம்படுத்தப்பட்ட மின்னிலக்க வளங்களை ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மதிப்பீட்டு ஆண்டு 2025ல், 90 விழுக்காட்டுக்கும் அதிகமான நிறுவனங்கள் வருமான வரிப் படிவங்களை உரிய நேரத்தில் தாக்கல் செய்தன. சரியான நேரத்தில் தாக்கல் செய்வது, அனைவரும் வரி செலுத்துவதை உறுதி செய்வதோடு, சிங்கப்பூரின் பொதுச் சேவைகளுக்கும் உள்கட்டமைப்புகளுக்குமான அத்தியாவசிய நிதி ஆதாரத்தையும் வழங்குகிறது.
பெரும்பாலான நிறுவனங்கள் வரி விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கின்றன. அதே வேளையில், தவறிழைக்கும் சிறுபான்மை நிறுவனங்கள் மீது ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
2025 மதிப்பீட்டு ஆண்டுக்கும் அதற்கு முன்னரும் வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்யத் தவறிய நிறுவனங்களுக்கு, நீதிமன்ற விசாரணைக்குச் செல்லுமாறு உத்தரவிடும் 4,100க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை ஆணையம் அனுப்பியுள்ளது. இதன் மூலம் மொத்தம் $2 மில்லியனுக்கும் அதிகமான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கெடுவுக்குள் வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்யாத நிறுவனங்களுக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படக்கூடும்.
மேல் விவரங்களுக்கு go.gov.sg/cit-2026 எனும் இணையத்தளத்தை நாடலாம்.