நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 35 வீடுகள் அடித்து சென்றதால் மக்கள் அச்சம்
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 35 வீடுகள் அடித்து சென்றதால் மக்கள் அச்சம்
புதுடெல்லி: நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் நிலச்சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ஒட்டுமொத்த கிராமங்களையும் நிலைகுலைய வைத்துள்ளது. நேபாள நாட்டின் கோர்கா மாவட்டத்தில் உள்ள சுமனுவமி கிராமப்புற நகராட்சி பகுதியில் இன்று பெரும் நிலச்சரிவு, புதி கண்டகி ஆற்றில் பிரம்மாண்டமான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீற்றத்தில் பையு மற்றும் பாகர் கிராமங்களில் இருந்த 35 வீடுகள் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் பல தொங்கு பாலங்கள், கிராமப்புற பாதைகள் மற்றும் உள்ளூர் நீர்மின் உற்பத்தி நிலையங்கள் என லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கட்டமைப்புகள் வெள்ளத்தில் கரைந்துள்ளன.
இப்பகுதிகளில் வசிப்பவர்கள் நதிக்கரையை விட்டு வெளியேறி மேடான இடங்களுக்குச் செல்லுமாறு நிர்வாகம் எச்சரித்துள்ளது. இக்கட்டான சூழலில் நேபாள ராணுவமும் போலீசாரும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகளில் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் தரப்பில், ‘வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது அவசியம், தாழ்வான பகுதியில் வசிக்கும் தனாஹூன், சித்வான் மற்றும் நவால்பராசி மாவட்ட மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த துயரத்தை எதிர்கொள்ளத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளைச் சீரமைப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்காலிக முகாம்களில் உணவு மற்றும் மருத்துவ வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.