📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 11, 2026 07:05 PM

F1 சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ்: 301,000+ ரசிகர்கள் வருகை

F1 சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ்: 301,000+ ரசிகர்கள் வருகை

சிங்கப்பூரில் நடைபெறும் எஃப்1 போட்டித் தொடரின் வரலாற்றில் ஆக அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் பார்வையிட்ட பட்டியலில் இரண்டாம் நிலையில் இவ்வாண்டின் பந்தயம் இடம்பெற்றுள்ளது.

மூன்று நாள் நடைபெறும் கார்ப் பந்தயத்துக்கான தொடரில் இதுவரை 301,295 ரசிகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

தென்கிழக்காசிய வட்டாரத்தையே பேரளவில் பாதித்துள்ள புகைமூட்டத்தையும் பொருட்படுத்தாது வார இறுதியில் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்று முடிந்த வகையில் ரசிகர்கள் கூட்டம் போட்டி நடக்கும் பந்தயச் சாலை வளாகத்தைச் சூழ்ந்துள்ளது.

‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிரான்ட் பிரீ’ என்று அழைக்கப்படும் உலக அளவில் புகழ்பெற்ற இந்த இரவுநேரப் போட்டியில் 2022ஆம் ஆண்டில்தான் ஆக அதிக அளவில் 302, 000 ரசிகர்கள் ஒன்று திரண்டிருந்தனர். 2025ன் பந்தயத்தை 300,641 ரசிகர்கள் பார்வையிட்டனர்.

இவ்வாண்டு 17ஆம் முறையாக சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டியில் ஸ்பிரின்ட் என்ற குறும்பந்தயம் முதன்முறையாக அறிமுகம் கண்டது. சனிக்கிழமை நடந்த அப்போட்டியில் ரெட் புல் குழுவின் ஓட்டுநர் மெக்ஸ் வெர்ஸ்டபன் முதலிடத்தில் வந்து வெற்றிபெற்றார். 29 வயது நிரம்பிய அவர் ஹாலந்தைச் சேர்ந்த தந்தைக்கும் பெல்ஜியத்தைச் சேர்ந்த தாயாருக்கும் பிறந்தவர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முக்கியப் பந்தயத்தில் பலரது பார்வையும் அவர்மீதுதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் அவர் 1 நிமிடம் 31.373 நொடிகளில் முதலிடத்தைப் பிடித்தார். அவருக்குப் பின்னால் இரண்டாம் இடத்தை ஃபெராரி குழுவின் சார்ல்ஸ் லெகிலர்க் 0.054 நொடிகள் பின்தங்கி வந்தடைந்தார். மூன்றாம் இடத்தில் லுவிஸ் ஹெமில்டன் வந்தார்.

கடந்த 16 பந்தயங்களிலும் தகுதிச் சுற்றில் முதலில் வந்தோரே வென்றுள்ளதால் ஹாலந்தின் மெக்ஸ் வெர்ஸ்டபன் பந்தயத்தை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் கடந்த வார இறுதியில் மலேசியாவில் நடந்த பஹ்ரேன் எஃப்1 கார்ப் பந்தயப் போட்டியில் அவரே வாகை சூடினார் என்பது நினைவுகூரத்தக்கது.