📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 28, 2026 01:03 AM

மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்று விட்டால் கட்சிப் பதவியை ராஜிநாமா செய்ய தயார்

மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்று விட்டால் கட்சிப் பதவியை ராஜிநாமா செய்ய தயார்

மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்று விட்டால் கட்சிப் பதவியை ராஜிநாமா செய்ய தயார் - ஆதவ் அர்ஜுனா சவால்

மதுராந்தகத்தில் திமுக தோற்றுவிட்டால் உங்கள் கட்சிப் பதவி அனைத்தையும் 'ரிஸைன்' பண்ண நீங்கள் தயாரா? என்று உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்தார்.

Published : September 27, 2026 at 10:56 PM IST

செங்கல்பட்டு: "மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று விட்டால், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் பதவியை ராஜிநாமா செய்ய தயார்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார்.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், "சாதி பலம், பண பலம் இல்லாமல் நம்ம அண்ணன் விஜய்யை பெண்கள், இளைஞர்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தீர்களா? இல்லையா? 200 தொகுதியில் ஜெயிக்கும் என்று சொன்ன திமுகவை எதிர்க்கட்சி வரிசைல உட்கார வைத்து விட்டீர்கள். நம்மை சாதாரணமாக நினைத்துவிட்டார்கள். இவர்களுக்கு விசில் அடிக்கத்தான் தெரியும் என்றார்கள்; அந்த விசிலே நமக்கு சின்னமாக வந்து, மொத்தமாக இவர்களை விசில் அடித்துப் போய்விட்டது.

தாராபுரத்தில் ஒரு பெண் வேட்பாளரை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆபாசமாக பேசுகிறார். அண்ணா வளர்த்த கட்சி, கலைஞர் பாதுகாத்த கட்சி, அதன்பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு வெற்றியை வைத்து ஆட்சி செய்தார். அதோட மக்கள் அவர்களைத் தூக்கி எறிந்து விட்டார்கள். தற்போது இருப்பது உதயநிதி திமுக. அவர்களின் வாயில் வருவது எல்லாமே ஆபாசம் மட்டும் தான். திமுக-வை அழிக்க வேறு யாரும் வர வேண்டாம்; உதயநிதியே போதும்.

இதுவரை நாம் எந்த கூட்டத்திலும் பெண்களைப் பற்றி தவறாகப் பேசியதில்லை. ஆனால், அந்தப்புரத்தை விட்டு உதயநிதி ஸ்டாலின் வெளியே வந்ததே கிடையாது. 2015-ல் இருந்து 2021-வரை திமுக எதிர்க்கட்சியாக இருந்தது. என்றைக்காவது உதயநிதி வெளியில் வந்து வேலை செய்ததை பார்த்து இருக்கிறீர்களா? போராட்டம் பண்ணியதைப் பார்த்திருக்கிறீர்களா? மக்கள் முன்பு ஓட்டு கேட்டுப் பார்த்து இருக்கீங்களா? எடுத்த உடனே எம்எல்ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் என முதலமைச்சர் ஆகணும்னு எல்லா வேலைகளையும் பார்த்தார்கள். ஆனால், நம்ம தலைவர் விஜய் மொத்தமாக முடித்துவிட்டார்.

மதுராந்தகம் தொகுதியில் திமுக ஜெயித்து விட்டால், நான் என்னுடைய பொதுச் செயலாளர் பதவியை 'ரிஸைன்' பண்ணி விடுகிறேன். நீங்கள் தோற்றுவிட்டால் உங்கள் கட்சிப் பதவி அனைத்தையும் 'ரிஸைன்' பண்ண நீங்க ரெடியா? நான் சவால் விடுகிறேன். மதுராந்தகம் தொகுதியில் ஒரே ஒரு ஓட்டு நீங்கள் கூடுதலாக வாங்கி காட்டி விடுங்கள். ஓட்டுக்கு ஒரு ரூபாய்கூட பணம் கொடுக்க மாட்டோம்; எங்க அம்மா, எங்க அக்கா, எங்க தங்கச்சியிடம் நாங்க காசு கொடுத்து ஓட்டு வாங்கணுமா? இனி அந்த கலாச்சாரம் கிடையாது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக்குப் பிறகு அந்த கட்சி ஐந்து குழுவாக ஆகிவிட்டது. அந்தக் கட்சியை 5 குழுவாக உடைத்ததுதான் அவருடைய சாதனை. இன்றைக்கு 10 தோல்வி பழனிசாமியாக அவர் இருக்கிறார். மதுராந்தகத்தில் அதிமுகவினர் திமுகவுக்கு வேலை செய்கிறார்கள். தாராபுரத்தில் திமுகவினர் அதிமுகவுக்கு வேலை செய்யுறாங்கள். அரசியலில் திமுகவும் அதிமுகவும் முன்பு எப்படி தேர்தலில் சண்டை போடுவார்கள் என்று பார்த்திருக்கிறீர்களா? நம்ம அண்ணன் வந்த பிறகு கட்சியும் போச்சு; ஆட்சியும் போச்சு. இப்போ இருவரும் சேர்ந்து கொண்டார்கள்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு கேள்வி கேட்கிறார், "விஜய் அவர்களே நீங்க நடிக்கும்போது உங்களுக்கு தேசிய விருது கிடைச்சிருக்கான்னு?" எங்களுக்கு தேசிய விருதெல்லாம் முக்கியமல்ல; மக்கள் மனசுல அண்ணன் எப்படி இருக்கிறார். மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மாதிரி. எம்.ஜி.ஆரைப் பார்த்து தேசிய விருது கிடைத்ததான்னு யாரும் கேட்க முடியாது. தனியா தேர்தலில் நின்று ஜெயிச்சுப் போய்கிட்டே இருந்தாரு. அதுபோலவே தனியாக நின்று, 40 கட்சி கூட்டணியை தூக்கி எறிந்த வரலாறு எங்க அண்ணனோடது.

திமுகவும் அதிமுகவும் சேர்ந்தாலும் அவர்களுக்கு 'டெபாசிட்' இல்லை என்று சொல்லணும். தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து, நம் அண்ணன் விஜய்யை அடுத்த 25 வருஷம் ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்பதற்கு ஒரு அடித்தளத்தை மதுராந்தகத்தில் இருந்து உருவாக்குவோம்" என்றார்.