📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health October 07, 2026 09:03 PM

கைவிட்ட குறுவை... கனவாகி போய்விடுமா சம்பா?

கைவிட்ட குறுவை... கனவாகி போய்விடுமா சம்பா?

நாகப்பட்டினம்: காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட் டுள்ள நிலையில், சம்பா சாகு படிக்கும் போதிய தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால், இந்த ஆண்டு டெல்டாவில் நெல் உற்பத்தி மிகக் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

2002-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததுடன், கர்நாடகாவிலிருந்து காவிரி நீர் கிடைக்கவில்லை. வடகிழக்கு பருவ மழையும் கைகொடுக்காததால் டெல்டா கடும் வறட்சியை சந்தித்தது. இதனால் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. வறுமையின் காரணமாக வயல்களில் எலிகளை பிடித்து உணவாக உட்கொண்ட சம்பவங்கள் அப்போது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. கால் நடைகளுக்கு தீவனம் கிடைக்காமல் அவற்றை அடி மாட்டுக்கு விற்கும் நிலையும் ஏற்பட்டது. இதையடுத்து இலவச அரிசி, வேலைக்கு உணவு திட்டம், பசுந்தீவனம் உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழாண்டில் டெல்டாவில் பம்ப்செட் பாசனத்தை நம்பி ஒரு சில ஆயிரம் ஏக்கர்களில் மட்டுமே குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, சம்பா சாகுபடிக்கான காலம் தொடங்கிய நிலையில். மேட்டூர் அணையில் இருந்து செப்.1-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையில் இருந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கடைமடைக்கு வராத நீர்: தண்ணீர் திறப்பில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக பல விவசாயிகள் நாற்றுவிட்டு நடவு செய்யும் முறையை கைவிட்டு, நேரடி நெல் விதைப்பை மேற்கொண்டனர். ஆனால், அணையில் நீர் திறந்து ஒரு மாதம் ஆகியும் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை எனவும், இதனால் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அணையின் நீர் மட்டம் 70 அடியாக சரிந்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு இன்னும் 8 நாட்களுக்கு நீர் திறக்க வேண்டியுள்ளதால், அணையின் நீர் மட்டம் 60 அடிக்கும் கீழே சரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், அணையின் டெட் ஸ்டோரேஜ் எனப்படும் குறைந்தபட்ச நீர் இருப்பு 32 அடியாகும். அணையின் நீர்மட்டம் 60 அடிக்குக் கீழே குறைந்தாலும், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து நீர் திறக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, நீர் இருப்பைக் கருத்தில் கொண்டு, வரும் 15-ம் தேதிக்குப் பின்னர் டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பை நீட்டிக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. மேலும், அதன்பின் வடகிழக்கு பருவமழை தொடங்கினால் மட் டுமே சம்பா சாகுபடியை ஓரளவுக்கு மேற்கொள்ள முடியும். இதனால், தண்ணீர் வந்ததும் விதைப்பு செய்யலாம் எனக் காத்திருப்பவர்களும், உழவு செய்து தெளிப்பு முறையில் சம்பா சாகுபடி செய்யத் திட்டமிட்டிருப்பவர்களும் பணியைத் தொடங்க முடியாமல் தவிக்கின்றனர்.

அக்.15-க்கு பிறகு?: இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் தமிழ்ச்செல்வன் கூறியது: “வழக்கமாக டெல்டாவில் 12 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெறும். ஆனால், தற்போது தண்ணீர் பற்றாக்குறையால் இந்த ஆண்டு சம்பா சாகுபடியின் நிலை கேள்விக்குறிதான். கடைமடையான நாகை மாவட்டம் திருமருகல் பகுதிக்கு பட்டுமல்லாமல், தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணைக்கு கீழ் உள்ள பகுதிகளுக்குக்கூட தண்ணீர் சென்றடையவில்லை.

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல இடங்களில் பயிர்கள் கருகிய நிலையில், விவசாயிகள் 2-வது முறையாக நேரடி விதைப்பு செய்துள்ளனர். 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என அரசு தெரிவித்துள்ள நிலையில், இந்த மாதம் 15-ம் தேதிக்குப் பிறகு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்பதால், சம்பா சாகுபடியை எவ்வாறு மேற்கொள்வது? என தெரியவில்லை என்றார்.

கடன் சுமை... அடுத்த அச்சம்:

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியது: ஏற்கெனவே முழுமையான கடன் தள்ளுபடி இல்லாததால் கடன் சுமையில் தவிக்கும் விவசா யிகள், தற்போது கந்து வட்டிக் காரர்களிடம் கடன் வாங்கி சம்பா சாகுபடி செய்துள்ளனர்.

இதுவும் பொய்த்துவிட்டால் அவர்களின் வாழ்வாதாரம் மேலும் மோச மடையும் அபாயம் உள்ளது. எனவே டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

2002-ல் ஏற்பட்ட பஞ்சம், பட் டினி போன்ற நிலை மீண்டும் உருவாகாமல் தடுக்க, விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கால்நடைகளை பாது காப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே டெல்டா மக் களின் எதிர்பார்ப்பாக உள்ளது.