📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 07, 2026 10:04 PM

பொருளியல் நடவடிக்கைகளை நாடுகள் பொறுப்புடன் எடுக்க வேண்டும்: ஐஎம்எஃப் தலைவர்

பொருளியல் நடவடிக்கைகளை நாடுகள் பொறுப்புடன் எடுக்க வேண்டும்: ஐஎம்எஃப் தலைவர்

உலக நாடுகள் தற்போது பல்வேறு பொருளியல் ஆபத்துகளைச் சந்தித்துவருவதாக அனைத்துலகப் பண நிதியத் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா கூறியுள்ளார். அவற்றைச் சமாளிக்க அரசாங்கங்கள் கொள்கைசார் நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இவ்வாண்டு தாய்லாந்தில் நடைபெறவுள்ள அனைத்துலகப் பண நிதியச் சந்திப்பின் தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை (அக்டோபர் 7) சிங்கப்பூரின் லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளி அரங்கில் நடந்தேறியது.

அதில் சிறப்புரையாற்றிய திருவாட்டி கிறிஸ்டலினா, தற்போது உலகம் மூன்று முக்கியப் பொருளியல் சவால்களைச் சந்தித்து வருவதாகச் சொன்னார்.

“செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சி, உயர்ந்துள்ள எரிசக்தி விலை, அதிகப் பொதுக் கடன் ஆகிய சவால்களைக் கையாள வேண்டியது மிகவும் முக்கியமாக உள்ளது,” என்றார் அவர்.

செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை அதிக நிதி ஆபத்து நிகழ்காலத்திலோ எதிர்காலத்திலோ இல்லை என்றும் அவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் உள்ளது என்றும் திருவாட்டி கிறிஸ்டலினா குறிப்பிட்டார்.

“அதிக எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நிறுவனங்களின் உண்மையான வருவாய் அமையாவிட்டால், அதிகப்படியான நிறுவனக் கடனும் அமெரிக்க தொழில்நுட்பப் பங்குகளில் உள்ள அதிகமான உலகளாவிய முதலீடுகளும் வருவாய் குறித்த சாதாரண ஏமாற்றத்தைக்கூட உலக அளவில் அதிர்ச்சியாக மாற்றிவிடக்கூடும்,” என்றார் அவர்.

இனி நாடுகள் தங்கள் பொருளியல் வளர்ச்சியை மட்டுமே சார்ந்து கடனை அடைத்துவிடலாம் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்க இயலாது என்றும் அவர் எச்சரித்தார்.

“கடந்த 17 ஆண்டுகளாகப் பெரும்பாலான நாடுகளின் பொருளியல் வளர்ச்சி விகிதத்தைவிட வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தன. அந்நாடுகளால் எளிதாகக் கடனை அடைக்க முடிந்தது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“ஆனால், தற்போது வட்டி விகிதங்கள் கூடிவிட்டதால், அரசாங்கங்கள் மேலும் கடன் சுமையில் திளைக்காமலிருக்கச் செலவினங்களைக் குறைப்பது, வரிகளை உயர்த்துவது, கடினமான நிதி முடிவுகளை எடுப்பது உள்ளிட்ட முயற்சிகள் அவசியமாகின்றன,” என்று திருவாட்டி கிறிஸ்டலினா குறிப்பிட்டார்.

அத்தகைய சவால்களைச் சமாளிக்க மத்திய வங்கிகள் எச்சரிக்கையான, கண்டிப்பான நிலைப்பாட்டைத் தொடர வேண்டும் என்றார் அவர்.

“கொள்கை வகுப்பாளர்கள் நம்பகமான இடைத்தவணைக்கால நிதி ஒருங்கிணைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

“மேலும், நீண்டகால வளர்ச்சிக்குத் தற்காலிக நிதிச் சிரமங்கள் அவசியம் என்பதைப் பொதுமக்களுக்குப் புரியவைக்கும் அதே வேளையில் சமூகத்தில் அதிகம் பாதிக்கப்படக்கூடியோரைப் பாதுகாக்கவும் வேண்டும்,” என்றார் திருவாட்டி கிறிஸ்டலினா.

அதன் பிறகு அவர், சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துடன் சிறப்புக் கலந்துரையாடலிலும் பங்கேற்றார்.

அதில் பேசிய திரு தர்மன், பங்குப் பத்திரச் சந்தைகளே தற்போது பல அரசாங்கங்களிடம் நிதி ஒழுங்குமுறையை வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டார்.

“அரசியல் காரணங்களால் அரசாங்கங்கள் தாங்களாக முன்வந்து செலவினங்களைக் குறைப்பது அரிது. ஆனால், அதிகரிக்கும் பங்குப் பத்திர வட்டி விகிதங்கள் அவர்களை அவ்வாறு செய்வதற்குக் கட்டாயப்படுத்துகின்றன,” என்றார் அவர்.

நெருக்கடியிலிருக்கும் நாடுகளுக்கு உதவுவதைவிட அதிகக் கடனுள்ள நாடுகளை மேற்பார்வையிடுவதே அனைத்துலகப் பண நிதியத்தின் தற்போதைய முக்கியப் பணியாக உள்ளது என்று அதிபர் சுட்டினார்.

நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் தாய்லாந்தில் நடைபெறவுள்ள சந்திப்பிலும் முன்வைக்கப்படும் என்று திருவாட்டி கிறிஸ்டலினா கூறினார்.