பெண்கள் எலும்பு, தசைப் பரிசோதனை செய்துகொள்ள வழிவகை: அமைச்சர் ஓங்
தேசிய சுகாதாரத் திட்டமான ‘ஹெல்தியர் எஸ்ஜி’யின்கீழ் பெண்கள் எளிதில் எலும்பு அடர்த்தி, தசைப் பரிசோதனைகள் செய்துகொள்ள வழிவகை செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எலும்புகளையும் தசைகளையும் வலுப்படுத்த தேவையான உதவிகளும் வளங்களும் வழங்கப்படும் என்றும் அதுதொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மெட் சிங்கப்பூர் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) நடந்த ‘ஹெர் வோர்ல்ட்’ ஆண்டின் சிறந்த பெண்மணி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
குறிப்பாக, குறிப்பாக மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு பெண்கள் எலும்புத் திசு, தசை இழப்புப் பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படுவதாகத் திரு ஓங் குறிப்பிட்டார்.
புதிய பரிசோதனை வழிகாட்டுதல்களின்படி, 50 வயதை அல்லது மாதவிடாய் நிறுத்தத்தை எட்டிய பெண்கள் எலும்புத் தேய்மானப் பரிசோதனையும் இடர் மதிப்பீடும் செய்துகொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.
அண்மையில், பரம்பரை மார்பக, சினைப்பைப் புற்றுநோய் மரபணுப் பரிசோதனைக்கான மானியம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதையும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங் சுட்டிக்காட்டினார். அதன்படி, தகுதிபெறும் குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் 70 விழுக்காடுவரை மானியம் கிடைக்கும். எஞ்சிய தொகையை அவர்கள் தங்கள் மெடிசேவ் கணக்கிலிருந்து செலுத்தலாம்.
மரபணுச் சோதனைக்குப் பிறகு பெண்களுக்கு மரபணு சார்ந்த ஆலோசனை வழங்கப்படும். பரிசோதனையில் நேர்மறையான முடிவு வரும் பெண்களின் குடும்பத்தார்க்கும் அந்த ஆலோசனை வழங்கப்படும்.
இத்தகைய அறிவிப்புகளால் 2026ஆம் ஆண்டைப் பெண்களுக்கான சிறப்பு ஆண்டாக அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
ஆண்களிடமிருந்து உடல் சார்ந்தும் சமூக எதிர்பார்ப்புகள் சார்ந்தும் பெண்கள் வேறுபடுவதால் அவர்களின் உடல்நலத்திலும் அவர்களுக்கான ஆதரவிலும் உலக நாடுகள் தொடர்ந்து சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் ஓங் வலியுறுத்தினார்.
அத்துடன், பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுவதும் இளம்பெண்களை ஊக்கப்படுத்துவதும் மிக முக்கியம் என்றும் அவர் சொன்னார்.
நிகழ்ச்சியில் டிபிஎஸ் குழுமத் தலைமை நிர்வாகி 58 வயது டான் சு ஷானுக்கு ஆண்டின் சிறந்த பெண்மணிக்கான விருதும் சுற்றுச்சூழல் ஆர்வலர் 32 வயது கோங் மன் ஜிங்கிற்கு இளஞ்சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டன.