📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 07, 2026 10:03 PM

ஜெம் வீரமணி வழக்கு: போலீஸ் அதிகாரிகளின் பங்கு குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

ஜெம் வீரமணி வழக்கு: போலீஸ் அதிகாரிகளின் பங்கு குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

சென்னை: ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில், காவல் துறை உயர் அதிகாரிகளின் பங்கு குறித்தும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருவதாக காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஜெம் வீரமணி மீதான வழக்கில் முன்னாள் காவல் ஆணையர் அருணின் தலையீட்டின் காரணமாக, வீரமணி, சாந்தியின் பெயர் புகாரில் குறிப்பிட்டிருந்தும் காவல் துறையினர் சரிவர விசாரிக்காததால், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், வழக்கை மூட 40 கோடி ரூபாய் வரை பணம் கைமாறியுள்ளதால், வழக்கை மூடியது குறித்தும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு தொடர்பான ஆதாரங்களை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு வழங்கும்படி வாராகிக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வாராகி தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அக்டோபர் 1 மற்றும் 6-ஆம் தேதிகளில் சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராகி, ஆதாரங்களை சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு புலனாய்வு குழு தரப்பில், ‘வழக்கின் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளது. மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த கட்ட அறிக்கை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

‘விசாரணை முறையாக நடந்து வருவதால் சிபிஐ விசாரணை தேவையில்லை. வழக்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா சிறப்பாக விசாரித்து வருகிறார்’ என பாராட்டு தெரிவித்த நீதிபதி, காவல் துறை தரப்பில் அடுத்த கட்ட அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, விசாரணையை அக்டோபர் 26-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.