📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 22, 2026 04:03 AM

இதய ஆரோக்கியம்: சிங்கப்பூர் இந்தியர்களுக்கான கலைப்படைப்புகள்

இதய ஆரோக்கியம்: சிங்கப்பூர் இந்தியர்களுக்கான கலைப்படைப்புகள்

ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக இருத்தல், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகள் அதிகமாக உள்ள போக்கு காரணமாக, சிங்கப்பூர் இந்தியர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.

“இதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை எளிதாகப் பரப்புவதற்காக, நிர்வாகக் குழு மற்றும் தொண்டூழியர்கள் நிலையில் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த தொண்டூழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முயல்கிறோம்,” என்று சிங்கப்பூர் இதய அமைப்பின் (SHF) தலைமை நிர்வாக அதிகாரி ஜாஃப்ரி ஓங் தெரிவித்தார்.

இதன் தொடர்பிலான நடவடிக்கைகளில் ‘ஆர்ட் ஃபார் த ஹார்ட் 2026’ எனும் போட்டியும் அடங்கும். நாடளாவிய நிலையில் 7 முதல் 17 வயது வரையிலான இளம் கலைஞர்களிடமிருந்து 2,000க்கும் மேற்பட்ட படைப்புகள் இதற்குச் சமர்ப்பிக்கப்பட்டன.

பங்கேற்பாளர்கள் தங்களது கலைப்படைப்புகள் மூலம் இதய நோய்கள் பற்றிய பொதுவான புரிதலையும், அவற்றைத் தடுப்பதற்கான ஆரோக்கியமான வாழ்க்கைமுறைப் பழக்கவழக்கங்களையும் வெளிப்படுத்த வேண்டியிருந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 30 சிறந்த கலைப்படைப்புகள், ‘அடுத்த நிறுத்தம்: உங்கள் ஆரோக்கியமான இதயம்’ (Next Stop: Your Healthier Heart) என்ற தொடரின் ஒரு பகுதியாகச் செப்டம்பர் 4 முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை பேஃபிரன்ட் (Bayfront) எம்ஆர்டி நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அக்டோபர் 31க்குள் அங்குள்ள கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி தங்களுக்குப் பிடித்த படைப்புகளுக்கு வாக்களிக்கலாம். அதிகப் பொதுவாக்குகளைப் பெறும் முதல் மூன்று கலைப்படைப்புகளின் வெற்றியாளர்கள் நவம்பர் 6ஆம் தேதி அமைப்பின் இணையத்தளம், சமூக ஊடகப் பக்கங்கள் வாயிலாக அறிவிக்கப்படுவர்.

இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களில் கதீஜா அப்துல் அனுரஃபீக்கும் ஒருவர்.

அல்ஸாகோஃப் அரபுப் பள்ளியின் தொடக்கப் பள்ளி 5ஆம் வகுப்பு மாணவியான இவர், கருத்து உருவாக்கம், வரைதல், வண்ணமடித்தல் வரை கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் செலவிட்டு ‘ஏ3’ அளவிலான தனது கலைப்படைப்பை நிறைவு செய்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அவரது படைப்பில் மையத்தில் ஒரு பெரிய மனித இதயம் இடம்பெற்றிருந்தது. ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளையும் உடற்பயிற்சியையும் குறிக்கும் வகையில், அதைச் சுற்றி பழங்களின் சிறிய வடிவங்கள், நடன அசைவுகளைப் போன்ற வரிகளுடன் கூடிய உருவங்களை வரைந்திருந்தார். சூரியன் உதிக்கும் வேளையில் ஓர் இளம் பெண் நடைப்பயிற்சி மேற்கொள்வதும் சித்திரிக்கப்பட்டிருந்தது.

“ஆரோக்கியமான இதயம் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். சிறிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்கூடப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை மக்கள் நினைவில் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். நாம் இதயத்தையும் உடலையும் பராமரித்தால், ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்,” என்று கதீஜா தப்லா! வார இதழிடம் கூறினார்.

மேலும், சிறு வயதிலிருந்தே இதய ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை இப்போட்டி தனக்குக் கற்பித்ததாகவும், இந்தச் செய்தியைப் பரப்புவதற்கு கலை ஒரு சிறந்த தளமாக இருக்கும் என்பதை நிரூபித்ததாகவும் அவர் கூறினார்.

“கலைப்படைப்புகளின் தரம் மிகவும் உயர்வாக உள்ளது,” என்று செப்டம்பர் 4ஆம் தேதி இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த மத்திய வட்டார மேயரும் ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டெனீஸ் புவா கூறினார்.

வெவ்வேறு வயதினர் இதயம் பற்றி தங்களுக்குத் தெரிந்தவற்றை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தியுள்ளனர். இளைய பங்கேற்பாளர்களின் பார்வைகள் களங்கமற்றவையாகவும் தூய்மையாகவும் இருந்தன. அதே நேரத்தில் வயதானவர்கள் இதய ஆரோக்கியத்தை விளக்க ஆழமான கருத்துகளைச் சிந்தித்துள்ளனர் என்று திருவாட்டி புவா குறிப்பிட்டார்.

“எம்ஆர்டி நிலையங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் இதய ஆரோக்கியக் கல்வியைப் புகட்டுவதற்கு இது ஒரு படைப்பாற்றல் மிக்க வழியாகும். மேலும், சிங்கப்பூரில் இறப்புக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக இதய நோய் இருப்பதால் இது மிகவும் முக்கியமானது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இளையர்களை ஈடுபடுத்துவது, இதய ஆரோக்கியத்தைச் சற்றே வித்தியாசமாக வரையறுக்கும் முதியவர்களுடன் தொடர்புகொள்ளவும் உதவுகிறது. ‘எனக்கு ஏற்கெனவே இந்த வயதாகிவிட்டது. நான் ஏன் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?’ என்று முதியவர்கள் நினைப்பதாகச் சிங்கப்பூர் இதய அமைப்பின் தலைமை நிர்வாகி ஜாஃப்ரி ஓங் கூறினார்.

“குழந்தைகள் உண்மையில் மிகவும் சக்திவாய்ந்த ஆதரவாளர்களாகவும் பிறரது கருத்துகளில் தாக்கம் ஏற்படுத்துவோராகவும் இருக்கிறார்கள்,” என்று கூறிய திரு ஓங், தமது தாயார் தம் பேச்சைக் கேட்கமாட்டார் என்றும் ஆனால், பாட்டி நீண்ட காலம் வாழ வேண்டும் என்று விரும்பும் தம் 8 வயது மகனின் பேச்சைக் கேட்பார் என்றும் விவரித்தார்.

‘ஆர்ட் ஃபார் த ஹார்ட் 2026’ போட்டி மூலம், இதய ஆரோக்கியத்தைப் பற்றிய தலைமுறைகளுக்கிடையேயான உரையாடல்களை உருவாக்க சிங்கப்பூர் இதய அமைப்பு முயல்கிறது.

அமைப்புடனும் எஸ்எம்ஆர்டி டிரெய்ன்ஸ் நிறுவனத்துடனும் நீண்டகாலத் தொடர்பைக் கொண்டிருக்கும் உலகளாவிய சுகாதார நிறுவனமான ‘டெருமோ ஏஷியா ஹோல்டிங்ஸ்’ (Terumo Asia Holdings) வழங்கிய மருத்துவச் சாதனங்கள், தொழில்நுட்பக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டில், இம்மூன்று அமைப்புகளும் இணைந்து தஞ்சோங் பகார் மற்றும் புரோமனேட் எம்ஆர்டி நிலையங்களில் முதல் இரண்டு ‘ஹெல்த்@ஸ்டேஷன்’ (Health@Station) முகப்புகளைத் தொடங்கின; இது 2025 அக்டோபரில் வட்ட ரயில் பாதையில் உள்ள மேலும் நான்கு நிலையங்களுக்கு விரிவாக்கப்பட்டது.

“சிங்கப்பூரர்களிடம் ரத்த அழுத்தப் பரிசோதனை, இதய ஆரோக்கிய விழிப்புணர்வைக் கொண்டுசேர்ப்பதே இதன் நோக்கமாகும். ஒன்றாக இணைந்து, எங்களது மையங்கள் மூலம் 3,50,000க்கும் மேற்பட்ட ரத்த அழுத்தப் பதிவுகளை நாங்கள் செய்துள்ளோம்,” என்று தொடக்க விழாவில் பேசிய திரு ஓங் கூறினார்.

உயர் ரத்த அழுத்தத்திற்குப் பெரும்பாலும் தெளிவான அறிகுறிகள் எதுவும் இருப்பதில்லை என்பதால், இந்தச் சமூக முயற்சிகள் அதிகமான மக்கள் தங்களின் ரத்த அழுத்த அளவீட்டை அறிந்துகொள்ளவும், ஆபத்துகளைப் புரிந்துகொள்ளவும், தங்களின் இதய ஆரோக்கியத்திற்கு அதிகப் பொறுப்பேற்கவும் ஊக்குவிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.