பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.4.84 கோடி முந்தியது மதுரை ஆவின்
மதுரை: தமிழக அரசு ஆவின் பால் கொள்முதல் விலை 1 லிட்டருக்கு (4.3 சதவீதம் கொழுப்பு, 8.2 சதவீதம் இதர சத்து கொண்ட) ரூ.36ல் (ஊக்கத் தொகை ரூ.3 உட்பட) இருந்து ரூ.44 ஆக (ஊக்கத் தொகை ரூ.8 உட்பட) உயர்த்தி அறிவித்தது. செப். 1 முதல் இத்தொகையை வழங்க உத்தரவிட்டது.
இதற்கான புதிய விலைப் பட்டியலை அரசு வெளியிட்டது.
இதன்படி மதுரை மாவட்டத்தில் ஆவினுக்கு பால் வழங்கும் 629 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 6,770 உற்பத்தியாளர்களுக்கு அரசு அறிவித்தபடி ரூ.4 கோடி 84 லட்சத்து 15 ஆயிரத்து 856 வழங்க பொது மேலாளர் முத்துமாதவன் உத்தரவிட்டார்.
இதையடுத்து அனைத்து உற்பத்தியாளர்கள் வங்கிக் கணக்கிற்கும் உரிய தொகை நேற்று ஒரே நாளில் வரவு வைக்கப்பட்டது. பால் விலை அறிவித்த பின் தமிழகத்தில் மதுரை ஆவின், முதன்முதலாக ஊக்கத் தொகையுடன் உற்பத்தியாளர்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.