டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க உயர்நிலைக் குழு கூட்டம்
புதுச்சேரி: புதுச்சேரியில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது மற்றும் கொசு உற்பத்தியை தடுப்பது தொடர்பான அவசர உயர்நிலைக் ஆலோசனைக் கூட்டம் சட்டசபையில் நடந்தது.
கூட்டத்திற்கு முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், செந்தில்குமார் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், உள்ளாட்சித்துறை இயக்குனர் ஆதர்ஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் தங்களது தொகுதிகளில் உள்ள சுகாதார நிலவரம் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கருத்துகளை தெரிவித்தனர்.
கூட்டத்திற்கு பின் முதல்வர் ரங்கசாமி அளித்த பேட்டியில், டெங்கு காய்ச்சல் வருவதற்கான காரணங்கள், அவை வராமல் இருப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. டெங்கு கொசு உற்பத்தியை தடுத்தல் , அதற்கான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், டெங்கு காய்ச்சல் பரவல் தடுக்க அதற்குரிய மருந்தை மழைக்கு ஒரு வாரத்திற்கு முன் தெளிப்பது, மழை வந்தாலும் தண்ணீர் தேங்கும் இடத்தை பார்வையிட்டு, ஒவ்வொரு வீடாக சென்று தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆஷா ஊழியர்கள் மூலமாக காய்ச்சல் குறித்து ஒவ்வொரு வீடாக சென்று பார்வையிட வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தற்போது அதிகமாக இல்லாததால், விழிப்புணர்வு மூலம் டெங்கு பரவாமல் இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இதில், உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் டெங்கு மற்றும் உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு எதுவும் தற்போது வரை இல்லை என்றார்.