📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 16, 2026 06:03 PM

என்95 முகக்கவசங்கள் வாங்க கட்டுப்பாடு

என்95 முகக்கவசங்கள் வாங்க கட்டுப்பாடு

புகைமூட்டப் பிரச்சினை மோசமடைவதால் கடைகளில் முகக்கவசங்கள் விரைவாக விற்றுத் தீர்கின்றன.

அதிகரித்துள்ள தேவையைக் கையாள சில சில்லறை விற்பனைக் கடைகள், வாடிக்கையாளர் ஒருவர் வாங்கக்கூடிய முகக்கவசங்களின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

ஆரோக்கியமற்ற நிலையில் காற்றுத்தரம்

அக்டோபர் மாதம் 5ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரின் காற்றுத்தரத்தைக் குறிக்கும் பிஎஸ்ஐ குறியீடு தொடர்ந்து 12 நாள்களாக ஆரோக்கியமற்ற நிலையில் இருந்துவருகிறது. 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு காற்றின் தரம் இத்தனை நாள்கள் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பது இதுவே முதல்முறை.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த கார்டியன் மருந்துக்கடையின் பேச்சாளர், என்95 முகக்கவசங்கள் உட்பட இவ்வாரம் எல்லா வகையான முகக்கவசங்களுக்குமான தேவை பெரிய அளவில் கூடியிருப்பதாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஒரு நாளில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக வாங்கக்கூடிய முகக்கவசங்களின் எண்ணிக்கைக்கு கார்டியன் நிறுவனம், அதன் நேரடிக் கடைகள், இணைய வர்த்தகத் தளங்களுக்குக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

நேரடியாகக் கார்டியன் கடைகளுக்குச் செல்லும் ஒருவர் நாளுக்கு அதிகபட்சமாக இரண்டு அட்டைப் பெட்டிகள் அளவு ‘சர்ஜிக்கல் மாஸ்க்ஸ்’ எனப்படும் சாதாரண முகக்கவசங்களையும் ஐந்து என்95 முகக்கவசங்களையும் வாங்கலாம். அதேபோல், அதன் இணைய வர்த்தகத் தளத்தை நாடும் வாடிக்கையாளர் நாளுக்கு அதிகபட்சமாக இரண்டு அட்டைப் பெட்டிகள் அளவு சாதாரண முகக்கவசங்களையும் ஓர் அட்டைப் பெட்டி அளவு என்95 முகக்கவசங்களையும் வாங்கலாம்.

வாட்சன்ஸ், யுனிட்டி உள்ளிட்ட கடைகள்

வாட்சன்ஸ் மருந்துக்கடை இதுபோன்ற கட்டுப்பாடுகளை இன்னும் விதிக்கவில்லை. தங்களின் கடைகளுக்குப் போதுமான அளவுக்குப் புதிய முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுவருவதாக அது தெரிவித்தது.

எனினும், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) அதன் இணைய வர்த்தகத் தளத்தில் கேஎன்95 முகக்கவசங்கள் உள்ளிட்டவை விற்றுமுடிந்ததாகத் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஃபேர்பிரைஸ் நடத்தும் யுனிட்டி மருந்துக்கடை போன்றவற்றிலும் முகக்கவசங்களுக்கான தேவை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. மேல்விவரங்களைப் பெற ‌ஷெங் சியோங் பேரங்காடி, சுகாதார அமைச்சு ஆகியவற்றை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

முகக்கவச விநியோகம்

இந்நிலையில், புதன்கிழமை (அக்டோபர் 14) முதல் சிங்கப்பூர் முழுவதும் உள்ள சமூக மன்றங்கள் தகுதிபெறும் சிங்கப்பூரர்களுக்கு என்95 முகக்கவசங்களை விநியோகிக்கத் தொடங்கின. பயனியர் மற்றும் மர்டேக்கா தலைமுறைகளைச் சேர்ந்த மூத்தோர், குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், சிறார்கள், ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோர் தகுதிபெறுபவர்களில் அடங்குவர்.