"சஞ்சு சாம்சனை வெளியே உட்கார வைத்தாலும் தப்பே இல்லை".. வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆதரவாக சரண்தீப் பேச்சு
"சஞ்சு சாம்சனை வெளியே உட்கார வைத்தாலும் தப்பே இல்லை".. வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆதரவாக சரண்தீப் பேச்சு
டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மூத்த வீரர் சஞ்சு சாம்சனை பெஞ்சில் உட்கார வைத்துவிட்டு, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரரும் தேர்வாளருமான சரண்தீப் சிங் அதிரடியாகக் கூறியுள்ளார்.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் செப்டம்பர் 13 அன்று இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக யார் களமிறங்குவது என்பதில் அணி நிர்வாகத்திற்கு பெரும் குழப்பம் நிலவுகிறது. அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகிய மூவருமே இயல்பான துவக்க வீரர்களாக இருப்பதால், மூவரையும் ஒரே பிளேயிங் லெவனில் சேர்ப்பது கடினம் என்று சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "மூவரும் ஒரே பாணியிலான தொடக்க வீரர்கள் என்பதால் அனைவரையும் ஒரே அணியில் அடைக்க முடியாது. சஞ்சு சாம்சனை 3-வது வரிசையில் களமிறக்குவது சரியாக இருக்காது. ஏனெனில் அவர் டி20 உலகக் கோப்பையிலும், சிஎஸ்கே அணியிலும் தொடர்ந்து தொடக்க வீரராகவே விளையாடி வருகிறார்" என்றார்.
மேலும், "ஐபிஎல் தொடர், ஜிம்பாப்வே டி20 தொடர் மற்றும் சமீபத்தில் முடிந்த துலீப் டிராபி ஆகியவற்றில் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி காட்டியுள்ள ஃபார்ம் மற்றும் பயம் இல்லாத ஆட்டத்தைக் கருத்தில் கொண்டு, அபிஷேக் சர்மாவுடன் அவரையே தொடக்க வீரராகக் களமிறக்க வேண்டும். இதற்காக சஞ்சு சாம்சனை வெளியே உட்கார வைத்தாலும் தவறில்லை" என்று அவர் அதிரடியாக கூறி இருக்கிறார்.
டெல்லியில் நடைபெற்ற வலைப்பயிற்சியில் சஞ்சு சாம்சன் நிதானமாக பேட்டிங் செய்ததை சுட்டிக் காட்டி, இளம் வீரர்களின் ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு சரண்தீப் சிங் ஆதரவாக பேசி இருக்கிறார். ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய அணியைத் தயார் செய்யும் வகையில், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அனுபவ வீரர் சஞ்சு சாம்சனுக்கு முன்னுரிமை தருவார்களா அல்லது இளம் வீரரான வைபவ்-வுக்கு வாய்ப்பளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.