📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 13, 2026 01:36 PM

"36 வயது என்பதால் ஷமி புறக்கணிக்கப்படுகிறாரா?" கோலி, ரோஹித்தை சுட்டிக்காட்டி ஆகாஷ் சோப்ரா விளக்கம்

"36 வயது என்பதால் ஷமி புறக்கணிக்கப்படுகிறாரா?" கோலி, ரோஹித்தை சுட்டிக்காட்டி ஆகாஷ் சோப்ரா விளக்கம்

"36 வயது என்பதால் ஷமி புறக்கணிக்கப்படுகிறாரா?" கோலி, ரோஹித்தை சுட்டிக்காட்டி ஆகாஷ் சோப்ரா விளக்கம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் 36 வயதான மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு அவரது வயது தான் காரணம் என்ற விவாதத்திற்கு முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை உதாரணமாகக் காட்டி அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு, இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதால், ஷமி வயது காரணமாக ஓரங்கட்டப்படுவதாக ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் போன்ற மூத்த வேகப்பந்து வீச்சாளர்கள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து கலக்கும் போது, ஷமியை மட்டும் ஏன் ஒதுக்குகிறார்கள் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த ஆகாஷ் சோப்ரா, "வயது தான் காரணம் என்று சொல்வது முற்றிலும் தவறானது. வயது மட்டுமே தடையாக இருந்திருந்தால், ஷமியை விட மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியைத் தொடர்ந்து அணியில் தேர்வு செய்திருக்க மாட்டார்கள். எனவே வயது என்பது இங்கே ஒரு பிரச்சனையே அல்ல" என்று திட்டவட்டமாகக் கூறினார்.

மேலும், ஸ்டார்க்குடன் ஒப்பிடுவதை மறுத்த சோப்ரா, "ஸ்டார்க் தனது உடற்தகுதியைத் தொடர்ந்து பராமரித்து, பெரிய காயங்களின்றி எப்போதும் முழு வேகத்துடன் பந்துவீசுகிறார். ஆனால் முகமது ஷமி அறுவை சிகிச்சை செய்துகொண்டு நீண்ட காலம் விளையாடாமல் இருந்தார். அவர் உள்நாட்டுப் போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், அவரது பழைய பந்துவீச்சு வேகமும், தீவிரமும் இன்னும் முழுமையாகத் திரும்பவில்லை என்ற சந்தேகம் தேர்வாளர்களுக்கு உள்ளது" என்றார்.

சமீபத்தில் துலீப் டிராபி இறுதிப் போட்டியில் விளையாடி தனது 100-வது முதல்தரப் போட்டியை நிறைவு செய்த முகமது ஷமி, தனது பழைய வேகத்தையும் முழு உடற்தகுதியையும் நிரூபிக்கும் பட்சத்தில் மட்டுமே மீண்டும் இந்திய அணிக்குள் வர முடியும் என்று ஆகாஷ் சோப்ரா சுட்டிக் காட்டி இருக்கிறார். எனினும், முகமது ஷமி உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து அதிக விக்கெட்களை வீழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.